
தஞ்சாவூர்
நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகளை தஞ்சாவூரில் உள்பகுதியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்கள் “நாங்கள் சாராயக் கடைகள் வேண்டாம் என்று சொல்கிறோம். ஏன் எங்கள் மீது அரசாங்கம் மீண்டும் மீண்டும் திணிக்கிறது?” என்று கேள்வி கேட்டனர்.
உச்சநீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடும்படி உத்தரவிட்டதன்படி தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3 ஆயிரத்து 400 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 214 டாஸ்மாக் சாராயக் கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் ஏற்கனவே 35 கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் தற்போது 124 கடைகள் மூடப்பட்டதால் தற்போது 55 கடைகள் செயல்படுகின்றன.
இப்படி கடைகளின் எண்ணிக்கை குறைத்ததர்கு மக்கள் ஹாப்பி அண்ணாச்சி. ஆனால், மொத்தமாகா அனைத்து சாராயக் கடைகளையும் மூடிவிட்டால் மட்டுமே இந்த அரசு மக்களுக்குப் பிடித்த அரசாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால், மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு பதிலாக மாற்று இடங்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இதில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் சாராயக் கடைகளை அமைக்க மக்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தஞ்சையில் வடக்கு வீதி, கொடிமரத்து மூலை, காமராஜர் சந்தை பகுதியில் இயங்கி வந்த மூன்று சாராயக் கடைகளும் மூடப்பட்டன. இந்த கடைகளை தற்போது வடக்குவாசல் ராமகிருஷ்ணாநகர் பகுதி, ராஜாகோரி சுடுகாடு, ஏ.ஒய்.ஏ. நாடார் சாலை ஆகிய இடங்களில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு அந்த பகுதி மக்கள் மிகுந்த கோபத்தில், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் வடக்குவாசலைச் சேர்ந்த மக்கள் வடக்குவாசல் நால்ரோடு பகுதியில் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் நீடித்தது.
இதுகுறித்து தகவலறிந்ததும் தஞ்சை தாசில்தார் குருமூர்த்தி, தஞ்சை நகர துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தாசில்தார், இதுகுறித்து மனுவாக எழுதி கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி மக்கள் மனு எழுதி கொடுத்தனர். பின்னர், மக்கள் மறியலை கைவிட்டனர்.
மக்கள் கருத்து:
‘‘வடக்குவாசல் பகுதியில் பள்ளிகள், கோவில்கள், கிறித்தவ ஆலயங்கள், மசூதிகள், வீடுகள், மாட்டுச் சந்தை போன்றவை உள்ளன.
இந்த பகுதியில் சாராயக் கடைகளை திறந்தால் அதிக அளவில் இடையூறு ஏற்படும். ஏற்கனவே இந்த பகுதியில் சாராயக் கடைகளால அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தன. தற்போது தான் இந்த பகுதியில் எந்த அசாம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் டாஸ்மாக் சாராயக் கடைகள் திறந்தால் பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமின்றி, நாங்கள் சாராயக் கடைகள் வேண்டாம் என்று சொல்கிறோம். ஏன் எங்கள் மீது அரசாங்கம் மீண்டும் மீண்டும் திணிக்கிறது? என்று கேள்விக் கேட்டனர். இங்கு டாஸ்மாக் சாராயக் கடைகள் திறக்க கூடாது’’ என்று கராராக தெரிவித்துவிட்டனர்.