
ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு இடங்களில் பணபட்டுவாடா செய்தவர்களுக்கு பொதுமக்கள் தரும அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இதனால் தமிழக அரசியல் கட்சிகளும் வெற்றி பெறும் முனைப்போடு தேர்தல் களத்தில் குதித்து வேலை பார்த்து வருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.
இதனிடையே தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் பணபட்டுவாடாவை தடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஜனநாயக விதிகளுக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் பட்டது.
நீங்கள் என்னதான் கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு கண்காணித்தாலும் நாங்கள் கொடுப்பதை கொடுப்போம், வாங்குவதை வாங்குவோம் என பணபட்டுவாடாவை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் அரசியல் கட்சியினர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் ராணுவப்படையினர் அங்காங்கே அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆர்.கே.நகரின் பல்வேறு இடங்களில் கையும் களவுமாக பணபட்டுவாடா கோஷ்டிகள் சிக்கினர்.
கொருக்குபேட்டை, அஜீஸ் நகர், 2 வது தெருவில் வாக்காளர்களுக்கு சிலர் பணம் தருவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது, கட்டு கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிய வந்தது. பின்னர் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைதொடர்ந்து அதே நகரில் 5 வது தெருவில் பண பட்டுவாடா செய்து கொண்டிருந்த 2 பேரை பிடித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மேலும் அங்கு இருந்த பெண்களை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அங்கு இருந்த பெண் ஒருவர் உடைகளை களைந்து போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.கே.நகர் 40 வது வட்ட பகுதியில் பணம் விநியோகம் செய்து கொண்டிருந்த 3 பேரை அப்பகுதி திமுகவினர் போலீசாரிடம் பிடித்து கொண்டிருந்தனர்.
ஆர்.கே.நகர் முருகன் கோவில் அருகே பணம் விநியோகம் செய்த ஒருவரை திமுகவினர் பிடித்து அடித்து உதைத்து தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதனால் நடத்துனர் உட்பட 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேபோல், தண்டையார்பேட்டை சீனியம்மன் கோவில் தெருவிலும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே வைத்தியநாதன் பாலம் அருகே சிலர் பணம் விநியோகித்ததாக கூறப்படுகிறது. அதை தடுக்க சென்ற திமுகவினர் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இதைதொடர்ந்து அந்த வரிசையில், கொருக்குப்பேட்டையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக காஞ்சிபுரம் திமுக ஒன்றிய செயலாளர் கோபாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.