
கண்ணீர் புகைக்குண்டுகளை உபயோகித்தும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் வேறுவழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது எனதூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரித் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
100ஆவது நாளான நேற்று தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் நேற்று இரவு முதல் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
நேற்று காலை தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்களை விவிடி சிக்னல் அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் காவல் துறையினர் கலைக்க முயற்சி செய்தனர். மேலும் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13பேர் வரை பலியாகினர். துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான காவல் துறையைக் கண்டித்தும், தமிழக அரசு பதவி விலகக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது கொடூரமாக நடத்திய துப்பாக்கி சூடு குறித்து காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்தும், அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தும் எரித்தனர். கண்ணாடிகளை சேதப்படுத்தியதால் போராட்டக்காரர்கள் சட்டவிரோத கும்பல் என அறிவிக்கப்பட்டனர்.
மேலும், அவர்களுக்கு தகுந்த எச்சரிக்கை விடப்பட்டது. அதன்பின்னரே, கண்ணீர் புகைக்குண்டுகளை உபயோகித்தும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் வேறுவழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என விளக்கமளித்தது.