தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

By Manikanda Prabu  |  First Published Nov 3, 2023, 4:43 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு, தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

மோசடி பேர்வழிகள்: பாஜகவினருக்கு நாராயணன் திருப்பதி எச்சரிக்கை!

அதேசமயம், தமிழக அரசு உத்தரவின் பேரில், இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையமும் விசாரித்து வந்தது. இந்த ஆணையம், தனது விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

மொத்தம் 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அதில் 1,048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 36 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த முழு அறிக்கையை அருணா ஜெகதீசன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். அதில், சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சமூக ஆர்வலர் ஹென்றி திபென் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

click me!