மக்களவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி? 90’ஸ் கிட்ஸ்களுக்கு எப்போது திருமணம் நடக்கும்? என பஞ்சாங்க கணிதர்கள் கணித்துள்ளனர்
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் இருக்காது நிலையான தன்மையே நீடிக்கும் எனவும், இரண்டு ஆண்டுகளில் 90 சதவீதம் 90’ஸ் கிட்ஸ் களின் திருமணம் நடைபெறும் எனவும் திருப்பூரில் குரோதி வருட பஞ்சாங்க வெளியீட்டு விழாவில் பஞ்சாங்க கணிதர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடர் சங்கம் சார்பாக குரோதி வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடர்கள் கலந்து கொண்டனர். இதில் 2024-25 ஆம் ஆண்டு குரோதி வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா மற்றும் சங்க உறுப்பினர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாங்க கணிதர் மதன் அகத்தியர், “2024-25 ஆம் ஆண்டு குரோதி வருடத்திற்கான பஞ்சாங்கம் கணிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு 17 புயல்கள் வரும் எனவும் அதில் 11 புயல்கள் வலுவற்றது எனவும் ஆறு புயல்கள் வலுவானது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
அதே போல் உலகின் தென்கிழக்கு நாடுகளில் அதிக சேதம் இருக்கின்ற நிலையில், தென்மேற்கு நாடுகளில் இதனால் சேதம் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், உலகம் முழுவதும் இந்த ஆண்டு பெரும் அழிவுகள் இருந்தாலும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ள இந்தியாவிற்கு அழிவு குறைவாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி தலைவர்கள் மேலும் வலிமை அடைகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின் சூளுரை!
மழையின் அளவை பொறுத்தவரை எங்கெல்லாம் கடந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்ததோ அங்கெல்லாம் குறைவாகவும், குறைவாக பெய்த இடங்களில் அதிகமாக பெய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிதம் கூறுவதாக மதன் அகத்தியர் தெரிவித்தார். இந்தியாவில் விலை வாசியானது நிலையானதாக இருக்காது எனவும் ஏற்றத்துடனும், இறக்கத்துடனும் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனைப் பற்றி கணிப்புகள் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும், பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாத நிலையான தன்மையே நீடிப்பதாக பஞ்சாங்கத்தில் கணித்திருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து 90’ஸ் கிட்ஸ்களின் திருமணம் குறித்த கேள்விக்கு, 2024-25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுக்குள் 90 சதவீதம் 90’ஸ் கிட்ஸ்க்கு திருமணம் நடக்கும் எனவும், இதற்கு நான் கேரண்டி எனவும் தெரிவித்தார். அவர்களுக்கு திருமணம் நடைபெற மல்லிகை பூவை இறைவன் முன் வைத்து பெரியோர்களிடம் ஆசி பெற்று வணங்க வேண்டும் என பரிகாரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.