
திருவள்ளூர்
திருவள்ளூரில் கலர் ஜெராக்ஸ் எடுத்த ரூ.2000 ரூபாய் நோட்டை கொடுத்து மீன் வியாபாரியான மூதாட்டியிடம் மீன் வாங்கிவிட்டு மர்ம நபர் ஒருவர் சென்றுவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து அந்த மூதாட்டி கதறி அழுதார்.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் - ஒரகடம் பிரதான சாலையில் நீண்ட காலமாக மீன் வியாபாரம் செய்து வரும் 70 வயது மூதாட்டி வள்ளி.
இவர் வழக்கம்போல நேற்றும் மீன் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரூ.400-க்கு மீன் வாங்கினார். ஆனால், அவர் அந்த மூதாட்டிக்கு கொடுத்தது 2000 ரூபாய் நோட்டு.
மூதாட்டி வள்ளியும் ரூ.400 போக, மீதி ரூ.1600-ஐ அந்த நபரிடம் திருப்பி கொடுத்துள்ளார். பின்னர், வியாபாரம் எல்லாம் முடிந்து பணத்தை எண்ணியபோது 2000 ரூபாய் நோட்டு சாயம் போனது. அதனைக் கண்டு வள்ளி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இதுகுறித்து சந்தேகமடைந்த வள்ளி அருகிலுள்ளவர்களிடம் விசாரித்தபோது, அது கள்ள நோட்டு என்றும் ரூ.2000 நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து வள்ளியை அந்த நபர் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த மூதாட்டி கதறியழுததைப் பார்த்த அங்கிருந்தவர்களிம் வருத்தப்பட்டனர்.
ரூ.2000 நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து மூதாட்டியை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.