படகுகளை நிறுத்திய ராமேஸ்வரம் மீனவர்கள்… துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று வேலை நிறுத்தம் !!!

First Published Nov 15, 2017, 8:38 AM IST
Highlights
fishermen strike in rameswaram


கச்சத் தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் படகில் இருந்த மீனவர்கள் பிச்சை மற்றும் ஜஸ்டின் ஆகிய இருவருக்கு கைகளில் குண்டு காயம் ஏற்பட்டது.

இதன் பின்னரும் அவர்களை விசாரணை என்ற பெயரில் இரும்புக் கம்பிகளால் தாக்கியுள்ளனர். இந்நிலையில் கரை திரும்பிய மீனவர்கள் இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகக் காயமடைந்த மீனவர் பிச்சை மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழு போலீஸாரிடம் இந்திய கடலோரக் காவல்படையினர் மீது புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் இந்திய கடலோரக் காவல்படை கப்பல் 77-ன் அதிகாரிகள் மீது கொலை முயற்சி, காயம் ஏற்படுத்துதல் மற்றும் இந்திய ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்: இந்திய கடலோர காவல்படையினரின் தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை  தொடங்கியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய கடலோர காவல் படையினரை  கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த அடையாள நிறுத்தத்தில் 75 ஆயிரம் மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால்.2 கோடி  ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்..

 

click me!