குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர்; பாம்பு கடித்து நால்வர் மருத்துவமனையில் அனுமதி; நடவடிக்கை எடுக்க கெஞ்சும் மக்கள்...

First Published Nov 15, 2017, 7:56 AM IST
Highlights
Flood water in the residential area The snake bites four in hospital People who plead to take action ...


திருவள்ளூர்

திருவள்ளூரில் குடியிருப்புகளில் வெள்ள நீரால் சூழ்ந்ததால்  மக்கள் பெரும் அவதியில் உள்ளனர். இரவு நேரத்தில் பாம்பு கடித்ததால் நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், நத்தமேடு கிராமத்தைச் சுற்றிலும் ராகவேந்திரா நகர், பாலாஜி நகர் 1, 2, 3 ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்தக் குடியிருப்புகளில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால், அப்பகுதியில் நத்தமேடு ஏரி நிரம்பியது. ஆனால் மதகுகள் திறக்கப்படவில்லை. இதனால் வெள்ள நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளதால்  அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் குடியிருப்புகளிலேயே முடங்கியுள்ளனர்.

அத்தியவாசிய பொருள்கள் வாங்குவதற்கு முழங்கால் அளவு நீரில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதேபோல், மழை பெய்யும் போதெல்லாம் ஏரியைத் திறந்துவிடாததால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்து விடுவதால் அவதிப்படுவதாகவும், ஏரி மதகுகளை திறந்துவிட்டாலும் வெள்ள நீர் வடிய இரண்டு வாரம் ஆகும் நிலை உள்ளது என்று அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.

மேலும், மக்கள் கூறியது: "இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாத நிலையில், விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. அதிலும், இப்பகுதியில் பாலாஜிநகர் 2-வது தெருவைச் சேர்ந்த இந்துமதி (26), 1-வது தெருவைச் சேர்ந்த விஜயலட்சுமி (21) , பிளஸ் 2 மாணவர்கள் சஞ்சய், சந்தோஷ் ஆகியோரை இரவு நேரத்தில் பாம்புகள் கடித்தன. இதனால் அவர்களை கட்டிலில் வைத்து தூக்கிக் கொண்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியுள்ளோம். இதனால் இரவு நேரங்களில் குழந்தைகளை வைத்துக் கொண்டு இருக்க முடியாத நிலையில் தீவுக்குள் இருப்பது போல் தவித்து வருகிறோம்.

இதுவரை அதிகாரிகள் பார்வையிட்டு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இந்த வெள்ளநீரை கடக்க படகு வசதியும் செய்து தரவில்லை. இதனால், அனுமதியின்றி ஏரி மதகுகளை அடைத்து மீன் வளர்ப்போரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

click me!