அமராவதி ஆற்றில் உலா வரும் பெரிய பெரிய முதலைகளால் மக்கள் அச்சம்; உயிர்சேதம் ஏற்படுமுன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை...

First Published Nov 15, 2017, 6:33 AM IST
Highlights
People are afraid of large crocodiles that come in the Amaravathi River Request to take action before survival ...


திருப்பூர்

திருப்பூரில் உள்ள அமராவதி ஆற்றில் பெரிய பெரிய முதலைகள் உலா வந்து கொண்டிருப்பதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மனிதர்களுக்கோ, கால்நடைகளுக்கோ உயிரிழப்பு ஏற்படுமுன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தின் நீராதரமாக இருப்பது அமராவதி அணை. இந்த அணை சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.

இந்த அணையில் இருந்து அமராவதி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மேலும் கல்லாபுரம், கொழுமம், குமரலிங்கம், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர் உள்ளிட்ட ஏராளமான கரையோர கிராமங்களின் குடிநீர் தேவையையும் அமராவதி ஆறுதான் நிறைவேற்றி வருகிறது. அதுமட்டுமின்றி கால்நடைகளின் தாகத்தையும் இந்த ஆறே தீர்த்து வருகிறது.

அமராவதி அணையையொட்டி முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு சிறிய மற்றும் பெரியது என ஏராளமான முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த முதலைப் பண்ணையை பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இந்த பண்ணையின் மேற்பரப்பில் வலைகள் இல்லாததால் இங்குள்ள முதலைக் குஞ்சுகளை பெரிய பறவைகள் தூக்கிச் சென்றுவிடுகின்றன. அப்படி எடுத்துச் செல்லும்போது தவறும் சில முதலைக் குஞ்சுகள் அமராவதி அணையில் விழுகின்றன.

இந்த நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் காலங்களில் முதலைக் குஞ்சுகள் அமராவதி ஆற்றுக்கு வந்து சேருகின்றன. இவ்வாறு வரும் முதலைக் குஞ்சுகள் ஆற்றின் கரையோர புதர்களில் ஒதுங்குகின்றன. அவைகள் காலப்போக்கில் நன்கு வளர்ந்து பெரிதாகிவிடுகின்றன.

சில நேரங்களில் ஆற்றின் நடுவில் உள்ள பாறைகளின் மீது முதலைகள் வந்து படுத்திருப்பதை காண முடிகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அமராவதி ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இவைகள் ஆற்றில் உள்ள மீன்கள், நீர்க்காகங்கள் ஆகியவற்றை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. சில நேரங்களில் ஆற்றில் இறங்கும் நாய்களையும் முதலைகள் உணவாக்கிக் கொள்கின்றன. இதனால் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படுமோ? என்ற அச்சம் அந்தப் பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் குளிக்க வருபவர்கள் ஒருவித பயத்துடனே இறங்குகின்றனர்.

பெரும்பாலான கிராம பகுதி மக்களின் பல்வேறுத் தேவைகளைப் பூர்த்திச் செய்துவரும் அமராவதி ஆற்றில் இறங்குவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதற்கிடையில் தற்போது மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் பாலத்தையொட்டிய பகுதியில் ஒரு முதலை காணப்படுகிறது. இது சில நேரங்களில் பாறைகளின் மீது வந்து ஓய்வெடுப்பதை பலரும் பார்த்துள்ளனர்.

ஆற்றில் தண்ணீரின் அளவு குறையும் காலங்களில் இந்த முதலை அருகில் உள்ள வயல்வெளியில் புகுந்து விடுகிறது. இந்த முதலையால் விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இங்கு ஒரு முதலைதான் உள்ளதா? அல்லது வேறு ஏதாவது முதலைகள் உள்ளதா? என்று தெரியவில்லை. எனவே பெரிய அளவில் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக இந்த முதலைகளை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கை.

click me!