சிவகங்கை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட பூரண சங்கீதா சின்னமுத்து என்பவர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் விநியோகம் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் மார்ச் 1ஆம் தேதி முதல் பெறப்பட்டு வந்தது. மார்ச் 7ஆம் தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு அளித்தவர்களிடம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 10ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சிவகங்கை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட பூரண சங்கீதா சின்னமுத்து என்பவர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இவர் யார் என்ற தேடல் அதிகரித்துள்ளது. திமுக மாணவரணியில் மாநில துணைச் செயலாளராக இருக்கும் பூரண சங்கீதா, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர். இவரது பரம்பரையே திமுகதான். கருணாநிதியால் சிறைப்பறவை என்று செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த திமுக மூத்த முன்னோடி எஸ்.எஸ்.தென்னரசுவின் பேத்திதான் பூரண சங்கீதா. இவரது தந்தை சின்னமுத்து, சிங்கம்புணரி நகர திமுக செயலாளராக இருந்தவர்.
சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் முன்னணி ஐடி நிறுவனங்களில் மனிதவள பிரிவு அதிகாரியாக பணியாற்றியிருக்கும் பூரண சங்கீதா, திமுகவில் இணைய வேண்டும் என்பதற்காக ஐடி நிறுவன பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் முயற்சியின் ஒரு பகுதியாக, பூரண சங்கீதாவுக்க்கு மாணவரணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அன்று முதல் இன்றி வரை பம்பரமாக சுழன்று களப்பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.
சிவகங்கை தொகுதியில் போட்டியிட தலைமை வாய்ப்பு தந்தால் பெருமளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என பூரண சங்கீதா சூளுரைத்துள்ளார். சிவகங்கை தொகுதி திமுக கூட்டணியில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்படும். அது, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் தொகுதியாகும். கடந்த முறை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக இருக்கிறார். இந்த முறையும் அவர் சிவகங்கை தொகுதிக்கு காய் நகர்த்தி வருகிறார்.
ஆனால், கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு தரக் கூடாது என காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த முறை அந்த தொகுதியை கேட்டு பெற வேண்டும் திமுகவினரும் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.