
கிருஷ்ணகிரி
ஒசூரிலிருந்து சென்னைக்கு விமான சேவையை தொடங்கப்படும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்ததன்படி இதுவரை அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹோஸ்டியா சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
செப்டம்பர் 2017-க்குள் உதான் திட்டத்தின் கீழ் சேலம், நெய்வேலி, ஒசூரிலிருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன. ஆனால், 2018-ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை.
இதுகுறித்து ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் வெற்றி. ஞானசேகரன், முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
"விடுமுறை காலங்களில் பயணிகள் வெளியூர் செல்ல சிரமம் அடைகின்றனர். கடந்த வாரம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு பெங்களூரில் வேலை செய்யும் தமிழக மென்பொறியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலானோர் வாகனங்களில் சென்னைக்குச் சென்றனர்.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் இருந்ததால், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, பள்ளிகொண்டா, வாலாஜாபேட்டை உள்ளிட்ட அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சுமார் 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. விடுமுறைக் காலங்களிலும் இதே நிலைதான் ஏற்படுகிறது.
மத்திய அரசானது ஒசூரிலிருந்து சென்னைக்கு விமான சேவை செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என அறிவித்திருந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதை அறிவித்திருந்தார்.
அதற்கேற்ப ஒசூரில் தனேஜா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் உள்ள விமான நிலையம் விமான சேவை தொடங்க தயார் நிலையில் உள்ளதாக அந்த தனியார் தொழிற்சாலை நிர்வாகமும் தெரிவித்தது. ஆனால் ஏனோ திட்டம் இன்னமும் தொடங்கப்படவில்லை?.
மேலும், ஒசூரிலிருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்குவதன் மூலம் சென்னை துறைமுகத்துக்கு ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் வாகன உதிரி பாகங்கள், கடிகாரங்கள், இஞ்ஜின்கள் உள்ளிட்ட பொருள்களை அனுப்பி வைக்க முடியும். இதன்மூலம் குறைந்த நேரத்தில் சென்னை துறைமுகத்துக்கு பொருள்கள் சென்றடையும்.
எனவே, விமான சேவையைத் தொடங்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, கிருஷ்ணகிரி எம்.பி. அசோக்குமார் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.