
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சித்தேரியில் துணை மின்நிலையம் அமைக்க 2013-14-ஆம் நிதியாண்டில் உத்தரவிட்டார். ஆனால், இதுவரையிலும் துணை மின்நிலையம் அமைக்கப்படவில்லை. அது எப்போது அமைக்கப்படும் என்று அடிப்படைத் தேவைகள் வேண்டி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட்டு இருக்கும் பழங்குடியின மக்கள் கேள்வி எழுப்பினர்.
சித்தேரி அரசு மருத்துவமனை எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, ஊராட்சியின் முன்னாள் தலைவர் வி.அழகேசன் தலைமை வகித்தார்.
அரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சித்தேரி ஊராட்சியில் 60-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. அதில், சூரியக்கடை, அரசநத்தம், கலசப்பாடி, மண்ணூர், மாங்கடை, நொச்சிக்குட்டை, ஆலமரத்துவளவு, எஸ்.அம்மாபாளையம் போன்றவை அடங்கும்.
“இந்த கிராங்களில் குடிநீர், சுகாதாரம் மற்றும் மின்சார வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
வாச்சாத்தி - அரசநத்தம், கலசப்பாடி செல்லும் மலைப் பகுதியில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் மேடு, பள்ளங்களுடன் சாலை உள்ளது. எனவே, அரசு அரசநத்தம் செல்லும் மண் சாலையை அகலப்படுத்தவும், புதிதாக தார்ச்சாலை அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்தேரி - மண்ணூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால் மலைக் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களை அடைகின்றனர். எனவே, சித்தேரியில் இருந்து மண்ணூர், மாங்கடை, எஸ்.அம்மாபாளையம் வரையிலும் தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
அரூர் – சித்தேரி வழித்தடத்தில் குறைவான அரசு நகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அவதியுறுகின்றனர். எனவே சித்தேரி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
சித்தேரி ஊராட்சியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சித்தேரியில் துணை மின்நிலையம் அமைக்க 2013-14-ஆம் நிதியாண்டில் உத்தரவிட்டார். ஆனால், இதுவரையிலும் துணை மின்நிலையம் அமைக்கப்படவில்லை. எனவே, சித்தேரியில் துணை மின் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரூர் வட்டாரப் பகுதியில் எஸ்.டி. சாதிச் சான்றுகளை பலர் போலியாக பெற்றுள்ளனர். எனவே எஸ்.டி. சாதிச் சான்று பெறுவோர் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.