
தர்மபுரியில் நடைப்பெற்ற உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டு பேசிய ஆட்சியர், “தர்மபுரி மாவட்டத்தில் 2016–ஆம் ஆண்டில் புதிதாக காசநோயால் 1326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்ற தகவலைத் தெரிவித்தார்.
“தர்மபுரி மாவட்ட காசநோய் தடுப்பு சங்கம்” சார்பில் உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரியில் நேற்று நடைபெற்றது.
இந்த ஊர்வலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கமலா நேரு மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்டது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக ரோட்டரி அரங்கைச் சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் காசநோயை தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தர்மபுரி ரோட்டரி அரங்கில் உலக காசநோய் தின கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் விவேகானந்தன் பேசியது:
“தர்மபுரி மாவட்டத்தில் 2016–ஆம் ஆண்டில் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்ட 1326 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் 1109 பேருக்கு மருத்துவர்களின் நேரடி பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 87 பேர் பூரண குணமடைந்து உள்ளனர். பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு சிகிச்சை பெற 257 பேர் அனுப்பப்பட்டு உள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் காசநோயை ஒழிக்க அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
ஒரு நோயாளி காசநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டால் அவருக்கு முழு சிகிச்சை அளிக்க காசநோய் தடுப்பு சங்கம் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
2017–ஆம் ஆண்டின் முடிவில் காசநோய் பாதிப்பு இல்லாத மாவட்டமாக தர்மபுரியை உருவாக்க ஒருங்கிணைந்து பாடுபடுவோம்” என்றுப் பேசினார்.
மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பொன்ராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் முல்லைசாரதி, காசநோய் தடுப்பு துணை இயக்குனர் ஆஷா பெட்ரிக், தொழுநோய் துணை இயக்குனர் நெடுமாறன், அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுரபி உள்பட மருத்துவத்துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.