
வாட்ஸ் அப்... இது முகம் தெரிந்த நண்பர்களை மட்டுமே இணைக்கும் தளம். இது ஆண்கள், பெண்கள் என அனைத்து வட்டத்திலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்பில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சில சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், வாட்ஸ் அப் பார்த்து வந்ததாலேயே கணவனால் கண்டிக்கப்பட்ட மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராமநாதபுரம் அருகே நடந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் அருகே, தெற்குனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் தங்கதுரை (42). இவருடைய மனைவி அருள்ஜோதி (38). அருள்ஜோதி செல்போனில் தொடர்ச்சியாக வாட்ஸ் அப் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதற்கு, ஜஸ்டின் தங்கதுரை, வாட்ஸ் அப் பார்ப்பதை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனாலும், அருள்ஜோதி தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த 28 ஆம் தேதி அருள்ஜோதி வழக்கம்போல், செல்போனில் வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த ஜஸ்டின் தங்கதுரை, அருள்ஜோதியை கண்டித்துள்ளார். இதில் விரக்தியடைந்த அருள்ஜோதி, அன்றைய தினம் வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர், அருள்ஜோதியை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அருள்ஜோதி அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜஸ்டின் தங்கதுரை, போலீசில் புகார் கொடுத்துள்ளார். வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.