2024 தேர்தல்: தமிழ்நாட்டில் கூட்டணி கணக்கு என்ன?

By Manikanda Prabu  |  First Published Aug 2, 2023, 2:47 PM IST

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அதுதொடர்பான கூட்டணிக் கணக்குகள், பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன


நாடாளுமன்ற மக்களவைக்கு 2024ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு 10 மாதங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. 2024 தேர்தலில் தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. இந்தியா எனும் பெயரில் கூட்டணியை அமைத்துள்ள எதிர்க்கட்சிகளின் அணியில் மொத்தம் 26 கட்சிகள் உள்ளன. இவை ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், 2024 தேர்தலில் ஹாட்-ரிக் வெற்றி பெற பாஜகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2019 தேர்தலில் தேசிய ஜனநாகயக் கூட்டணியில் இருந்த பல்வேறு கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு மாறி விட்டதால், எதிர்வரவுள்ள தேர்தலில் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகளையும், புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளிலும் அக்கட்சி இறங்கியுள்ளது.

Tap to resize

Latest Videos

தமிழகத்தை பொறுத்தவரை, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் பாஜக பயணித்து வருகிறது. இந்த கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய மூன்று கட்சிகள் முக்கியமானவை. இவற்றில் ஒப்பீட்டளவில் மற்ற இரு கட்சிகளை விட அதிமுக மட்டுமே வலிமையானது. ஆனால், இந்த 3 கட்சிகளிடையே பனிப்போர் நிலவி வருகிறது.

“2026-இல் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பதை இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறோம். அதற்கான முயற்சியை 2024 நாடாளுமன்ற தேர்தலிலேயே தொடங்கி விடுவோம்” என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பல்வேறு தருணங்களில் அதிமுகவை பாமக  கடுமையான விமர்சித்து வருகிறது. ஈரோடு இடைத்தேர்தலில்கூட, யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் பாமக ஒதுங்கிக் கொண்டது. அதேபோல், அதிமுக - பாஜக இடையேயான உறவிலும் நல்லிணக்கம் இல்லை.

இபிஎஸ் கோட்டையில் கெத்து காட்டிய ஓபிஎஸ், டிடிவி.தினகரன்.. அதிர்ச்சியில் அதிமுக..!

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு பாஜக விடுத்த அழைப்பை பாமக ஏற்கவில்லை. எனவே, இந்த மூன்று கட்சிகளும் 2024 தேர்தலில் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அதிமுக தலைமையில் கூட்டணி அமைப்போன் என சூளுரைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவருக்கு அதிக முக்கியத்துவமும் அளிக்கப்பட்டது.

இதனை வைத்து பார்த்தால் அதிமுக - பாஜக கூட்டணி அமைவது உறுதி என்றே கூறலாம். மேலும், தங்களை இணைத்துக் கொள்ளாமல் கூட்டணி அமைக்க அக்கட்சியை பாஜகவும் விடாது. அத்துடன், தென் மாநிலங்கள் மீது இந்த முறை பாஜக கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக, வேலூர், தென் சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், கோவை, திருப்பத்தூர், நீலகிரி, விழுப்புரம் ஆகிய 9 மக்களவை தொகுதிகளை அதிமுக கூட்டணியில் பெற்றுவிட அக்கட்சியின் தலைமை முனைப்பு காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த கால தேர்தல் வரலாற்றை பார்த்தால், பாஜக, பாமகவை தவிர்த்துவிட்டு அதிமுக பல தேர்தல்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. அந்த இரு கட்சிகளும் அல்லாமல் மெகா கூட்டணியை அமைத்து வெற்றிபெற முடியும் என அதிமுக நிரூபித்துள்ளது. அப்போதெல்லாம் வேறு சில கட்சிகளுடன் அக்கட்சி கூட்டணி அமைத்திருந்தது. அத்துடன் ஜெயலலிதா என்ற பிம்பமும் அக்கட்சிக்கு இருந்தது.

ஆனால், அதிமுகவின் நிலைமை இன்று வேறு மாதிரியாக உள்ளது. டிடிவி, ஓபிஎஸ், சசிகலா, எடப்பாடி என பிரிந்து கிடக்கிறது. இதில், கட்சியின் சின்னமும், தலைமையும் எடப்பாடி பக்கம் வந்துள்ளது. டிடிவி-ஓபிஎஸ் ஆகிய இருவரும் ஒன்றிணைந்துள்ளனர். சசிகலா தனியாக வலம் வருகிறார். அனைவரையும் ஒருங்கிணைப்பதே அவரது நோக்கமாக உள்ளது. அதிமுக இதுபோன்று பிரிந்து கிடந்தால், அக்கட்சியின் வாக்குகள் சிதறுவது உறுதி. இதற்கு கடந்த கால தேர்தல்களே சாட்சி. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தோல்வியையே சந்தித்துள்ளது. அப்போதுகூட ஓபிஎஸ் உடனிருந்தார். இப்போது அவரும் உடனில்லை. தென் மாவட்டங்களில் தேவர் சமுதாய முகமாக வேறு சிலரை முன்னிறுத்த எடப்பாடி முனைப்பு காட்டி வருகிறார். ஆனால், அது பெருமளவில் எடுபடவில்லை. மதுரையில் கூட்டம் நடத்துவதாக  அறிவித்தாலும், எடப்பாடியை மேற்கின் முகமாகவே தெற்கு பார்க்கிறது.

ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் அரசியல் அனாதையாகிவிட்டனர் - கே.பி.முனுசாமி காட்டம்

எனவே, கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய இந்த தருணத்தில் அதிமுகவால் வாக்குகள் சிதறுவதை அமித் ஷா விரும்பவில்லை. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, இபிஎஸ் அணி என அனைவரும் இணைந்த கூட்டணியே அமித் ஷாவின் விருப்பமாக உள்ளது. ஆனால், உட்கட்சி பிரச்சினையை தீர்ப்பதே அதிமுகவுக்கு பெரும் சவாலாக உள்ள நிலையில், இதற்கு முன்பு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த, தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் பக்கம் இழுப்பது கடினமாகவே இருக்கும். தற்போதைய அரசியல் சூழல்படி, சித்தாந்த ரீதியாகவும் பாஜக இடம்பெற்றிருக்கும் அதிமுக கூட்டணியில் அக்கட்சிகள் இணைய வாய்ப்பில்லை.

ஆனால், திமுகவை பொறுத்தவரை கூட்டணி பலமாக இருப்பதாகவே கூறுகிறார்கள். இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டத்துக்கும் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விசிக, மதிமுக, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸும் திமுக கூட்டணியில்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணையவே விருப்பம் காட்டி வருகிறது. இதனால், தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாகவே உள்ளது.

அதேசமயம், பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பாமக, பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என  அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விசிகவை விட பாமகவுக்கு வாக்கு வங்கி அதிகம் என்றபோதிலும், விசிகவை கூட்டணிக்குள் வைத்துக் கொள்ளவே ஸ்டாலின் விரும்புவதாக கூறுகிறார்கள். கடந்த சில தேர்தல்களில் பாமகவின் வாக்கு வங்கியும் சரிந்து வருகிறது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் மற்றொரு முக்கிய கட்சியாக தேமுதிக உள்ளது. ஆனால், ஒரு காலத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிகவை, கடந்த கால கசப்பான அனுபவங்களால் கூட்டணியில் சேர்க்கவே பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் அச்சப்படுகின்றன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெறும் 4 தொகுதிகளை மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்கியது. அதிலும், அக்கட்சி சொற்ப சதவீத வாக்குகளையே பெற்றது.

திமுக, அதிமுக என இரு கட்சிகளும் தங்களை புறக்கணித்த காரணத்தால் அவர்களை கடுமையாக சாடி வந்த தேமுதிக, முக்கியமான சமயங்களில்கூட பாஜகவை விமர்சிக்காமல் மென்மையாக நடந்துகொண்டார். இதற்கு காரணம் 2024 தேர்தல்தான். பாஜக தங்களை அரவணைக்கும் என்றே தேமுதிக நினைத்தது. ஆனால், டெல்லி கூட்டத்தில் தேமுதிகவுக்கு அழைப்பில்லை. சிறிய கட்சிகளான புதிய தமிழகம், ஐஜேகே, ஜான்பாண்டியன், ஏசி சண்முகம் போன்றவர்களுக்குக் கூட அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தேமுதிகவுக்கு அழைப்பில்லை. இதனால், அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இருப்பினும், பாஜகவுடனான் கூட்டணியைத்தான் பிரேமலதா விரும்புவதாக தெரிகிறது. திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான தகவல் வந்தபோது அதனை திட்டவட்டமாக மறுத்தார். இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். இதன்மூலம், பாஜக அழைப்புக்காக தான் காத்திருப்பதை சூசகமாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்றார்போல், அண்ணாமலையும் தனது யாத்திரைக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். தேமுதிகவுக்கு ஒன்றிரண்டு சீட் அல்லது ஒரு ராஜய்சபா சீட் கொடுத்து கூட்டணியில் பாஜக தக்க வைக்கும் என தெரிகிறது.

அதேசமயம், கூட்டணி வலுவாக இருந்தாலும், இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கான  இடத்தை குறைத்துக் கொடுக்கவே திமுக விரும்புவதாக தெரிகிறது. இதனால், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது சில சலசலப்புகள் எழுந்து அடங்கலாம் என்கிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை டிடிவி, ஓபிஎஸ், சசிகலாவை இணைத்து, பாஜக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளை அரவணைத்து வலுப்படுத்தினாலே வெற்றி ஓரளவு சாத்தியம் என்கிறார்கள்.

click me!