
த்ரிஷா நடிகர் விஜய் இருவரின் நட்பை பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் கொச்சைப்படுத்தவில்லை. நண்பர்களிடம் நேரம் செலவிடுவதை விட்டு குடும்பத்திற்கு மக்களுக்கும் நேரம் செலவிடுங்கள் என்று மட்டுமே அர்த்தம் வரும் தொனியில் அவர் பேசினார் என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சங்கீதாவின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
அதில், நல்லவர்களை கடவுள் சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார். ஒரு குடும்பத்தின் நன்மை கருதி ஒரு கட்சியின் தொண்டர்களின், சமுதாயத்தின் நன்மை கருதி, சகோதர பாசத்துடன் தமிழக பாஜக தலைவர் நைனார் கூறிய கருத்துக்களை, ஆபாச சிந்தனைகளுடன், தேர்தல் நாடகத்திற்காக திசை திருப்பியவர்கள் நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவின் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? நடிகர் விஜய் உள்பட, எந்த ஒரு தனிப்பட்ட நபரின் நடிகரின் அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து கருத்து சொல்வது பாஜகவின் வேலை அல்ல. சமூக நலன் மற்றும் ஒரு நபரின் மேல் உள்ள அக்கறையினால் மட்டுமே பல்வேறு தலைவர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துக்களை கூறிவந்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் மனிதநேயத்தின் இலக்கணம் நைனார் நாகேந்திரன் அவர்களின் கருத்தும் சமூக நலன் விஜய் அவர்கள் சார்ந்த கட்சியின் நலன் தொண்டர்களின் நலனை முன்னிட்டு நேர்மறையான நல்லெண்ணத்தோடு சொல்லப்பட்ட ஒரு கருத்து. அவருடைய நல்லெண்ணத்தை சிதைக்கும் முயற்சித்தவர்கள் இன்று சிதைந்து விட்டனர். சேலத்தில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், "எம்ஜிஆர் ஆரம்பித்த அண்ணா திமுக-வை இ.பி.எஸ் வைத்துள்ளார். அண்ணா ஆரம்பித்த திமுக-வை ஸ்டாலின் வைத்துள்ளார். என்னைப்போல, தனித்து ஒரு கட்சியை ஆரம்பித்து அரசியல் செய்ய முடியுமா?" என்று தற்பெருமையுடன கேள்வியை எழுப்பி இருந்தார்.
திமுகவிடம் கட்சியையும் தொண்டர்களையும் அடமானம் வைத்து, தமிழக மக்களுக்குத் துரோகம் செய்த விஜய், மக்களைச் சந்திக்காமல், மக்கள் பிரச்சனைகளைப் பேசாமல், கிணற்றுத் தவளையாக, யாரோ எழுதிக் கொடுப்பதைப் படித்து, அரசியல் வசனம் பேசி, அதிமுக- பாஜக கூட்டணியை வீழ்த்தி, திமுகவை வெற்றி பெற வைக்க, வழக்கம் போல மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்று நான் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தேன். நடிகர் விஜய் நல்ல அரசியல் தலைவராக உருவாக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நயினார் நாகேந்திரன், "பாவம், விஜய் அனுபவமே இல்லாமல் இருக்கிறார். முதலில் அவர் வீட்டில் இருந்து வெளியே வரட்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும். குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும் என்று, மூத்த சகோதரனாக, உள்நோக்கமின்றி ஆலோசனை சொன்னார்.
சகோதரனாக நயினார் நாகேந்திரன் அறிவுரை
அரசியல் சுயநலத்துடன் விஜய் செயல்படக் கூடாது, தொண்டர்களை, கட்சியை அடமானம் வைக்க கூடாது, கட்சியினரும், தொண்டர்களும், தமிழக மக்களும் துன்பத்தில் சிக்கித் தவிக்கும் போது, தான் மட்டும் மகிழ்ச்சியில் திளைத்து, "டைம் பாஸ்" அரசியல் செய்யக்கூடாது, தன்னிலை மறந்து தமிழக மக்களின் நலத்துக்கு எதிராக, லாட்டரி பேர ஆதாயத்திற்காக, சூழ்ச்சி அரசியல் செய்யக்கூடாது, நடிகர் விஜய் எதற்கும், யாரிடமும் மயங்கி விடக்கூடாது என்பதை, ஒரு சகோதரனாக நயினார் நாகேந்திரன் வெளிப்படுத்தி இருந்தார். மேலும், நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் எந்தவிதப் புகைப்படமும் வெளியிடுவது கிடையாது. அதே சமயத்தில் அந்தக் குறிப்பிட்ட நடிகையுடன் பல்வேறு புகைப்படங்களில் இருப்பதை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறார். இருவரும் லிப்டில் இருக்கும் புகைப்படம், நடிகையின் வீட்டில் நாயைக் கொஞ்சுவது போன்ற புகைப்படம், பிரபல நடிகையின் திருமணத்திற்குத் தனி விமானத்தில் கோவா சென்றது தொடர்பான புகைப்படம் போன்றவற்றை வெளியிட்டு வந்தார்.
இதில், நடிகர் விஜய்க்கு வருத்தம் இருந்தால், இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசியலில் அவதூறு பிரச்சாரங்கள் செய்பவர்களுக்கு மத்தியில், அன்பு சகோதரனாக, குடும்பத்திற்கும் கட்சியினருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். உங்களை நம்பியுள்ள தொண்டர்களை, கட்சியினரை, இரசிகர்களை, சுயநல அரசியலுக்காக ஏமாற்ற வேண்டாம் இன்று அவரை விரும்பும் அனைவருமே சிந்தித்தனர். தமிழக மக்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ளுங்கள், உண்மைகளைப் புரிந்து கொள்ளுங்கள் என்று, நல்லெண்ணத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுரை கூறியிருப்பதைத் திசை திருப்பி, திமுக பெண் எம்.பி.க்கள், திமுக ஆதரவுக் கட்சிகள், ஊடகங்கள் உள்நோக்கத்துடன் கொச்சைப்படுத்தி இருந்தன.
த்ரிஷா - விஜய் இருவரின் நட்பை கொச்சைப்படுத்தவில்லை
த்ரிஷா நடிகர் விஜய் இருவரின் நட்பை பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் கொச்சைப்படுத்தவில்லை. நண்பர்களிடம் நேரம் செலவிடுவதை விட்டு குடும்பத்திற்கு மக்களுக்கும் நேரம் செலவிடுங்கள் என்று மட்டுமே அர்த்தம் வரும் தொனியில் அவர் பேசினார். பாஜகவினர் எப்பொழுதும் தனிப்பட்ட ஒருவரது குடும்ப விஷயங்களைப் பற்றி, வெறுப்பு பேச்சுகளை பேசுவதில்லை கருத்தும் சொல்வதில்லை. திராவிட அரசியல் காலத்தில் பெரியார் என்கிற ராமசாமி தொடங்கி அண்ணா கருணாநிதி என அனைவருமே ஒவ்வொருவரின் தனிமனித வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பேச முடியாத விஷயங்களை பேசினர். விவாதித்தனர். திமுகவினர் வரலாற்றை மறந்து விட்டு பேசக்கூடாது.
கழிவுநீர்ச் சாக்கடையை விட மோசம் என்னும் அளவிற்கு, பெண்கள் மீதும், தனக்கு எதிராகப் பேசும் அரசியல் கட்சியினர் மீதும், திமுகவினர் செய்யும் ஆபாச அரசியலை யாரும் மறந்து விட முடியாது. சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்த, மக்கள் விரோத திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர், நயினார் நாகேந்திரனுக்குப் பாடம் எடுக்க வேண்டாம் இன்று நானும் என் கண்டனத்தை தெரிவித்து இருந்தேன். இருந்தாலும் பொது வாழ்வில் கண்ணியமும், பண்பும் பண்பாடும் அறிந்த அரசியல் நாகரீகம் தெரிந்த தமிழக பாஜக தலைவர் நைனா நாகேந்திரன் யார் மனதும் புண்பட்டு விடக்கூடாது இந்த நல்லெண்ணத்தில், தன் மீது தவறு இல்லை என்ற போதும், அரசியல் நாகரிகத்தின் இலக்கணத்துக்கு முன்னோடியாக வருத்தம் தெரிவித்திருந்தார். இதுதான் பாஜகவின் பண்பு. அரசியல் நாகரீகம்.
பெண்ணினத்துக்குப் பெருமை சேர்க்கும் கட்சி பாஜக. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அப்பழுக்கில்லாத ஆன்மீக அரசியல் வாழ்க்கையை, தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தும் விதத்திலும், மற்றும் அவர்களின் தாய், மனைவி மற்றும் குடும்பத்தினரை, அரசியல் ஆதாயத்திற்காகக் அவதூறாக பேச, பல கோடி ரூபாயைச் செலவு செய்த, திமுகவின் வரலாறு தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் தங்களுடைய நேர்மையான உழைப்பு, அர்ப்பணிப்புடன் சேவை செய்து அரசியல் செய்து ஆட்சியை பிடித்தார்கள். தி.மு.க, த.வெ.க. போல கட்சியை அடகு வைத்து, தேர்தல் வாக்கு வங்கிக்காக, தொண்டர்கள் பிணத்தின் மீது அரசியல் செய்யவில்லை.
திமுகவை வெற்றி பெற வைக்க விஜய் பாடுபடுகிறார்
தமிழகத்தில் பிணந்தின்னி அரசியலை முதலில் செய்தது தி.மு.க. இப்பொழுது த.வெ.க. தலைவர், நடிகர் விஜய், தனது ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் என, தன்னை நம்பி வந்து மாண்டு போன 41 பேர்களின் பிணங்களை வைத்து அரசியல் செய்கிறார். திமுகவை வெற்றி பெற வைக்க, நடிகர் விஜய் ஏன் பாடுபடுகிறார் என்பதற்கான ஆதாரங்களை, பாஜக விரைவில் வெளியிடும் என்றும் நான் கண்டனம் தெரிவித்திருந்தேன்.
மேலும் விஜய் பேசிய போது என்னை வீட்டை விட்டு வெளியே வா, பனையூரை விட்டு வெளியே வா என்று சொல்பவர்களுக்கு, என் வீடு எங்க இருக்குன்னு தெரியுமா என்று கேள்வி கேட்டிருந்தார். அவருக்கு எத்தனை வீடுகள் இருக்கின்றன என்ற பட்டியலை, 41 பேர்கள் உயிரிழந்த துயரச் சம்பவ நேரத்தில், அவர் எங்கெங்கு தங்கினார், அந்தத் துக்கத்தில் எப்படிப் பங்கெடுத்தார் என்னும் விவரத்தை, விஜய் விரும்பினால் விரைவில் நான் வெளியிடுகிறேன் என்று கூறியிருந்தேன். 41 பேர் உயிரிழந்த நேரத்தில் துக்கத்தை மறைக்க, கூடா நட்புடன் சாந்தோம் மியூசிக் ஊத்தப்பமும் சின்ன வெங்காய சாம்பாரும் ரசித்து ருசித்து துக்கத்தை மறந்த கதையை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.
மக்கள் ஏமாந்து விடுவார்களா?
41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் ஈரம் காய்வதற்கு முன்னே, கூடா நட்பின் உற்சாகத்தில் ஊறி திளைத்ததை நடிகர் விஜய் மறந்திருக்கலாம். மறைந்திருக்கலாம். தானாக உண்மை வெளிவரும் காலம் வந்துவிட்டது. எட்டுக் கோடி தமிழ்நாட்டு மக்களும் என் வீட்டு மக்கள் தான், அவர்கள் தான் என் குடும்பம், என் உறவு, என் சொந்தம் என்று, ஓட்டு அரசியலுக்காக வீர வசனம் பேசிய விஜய், 41 பேர்களின் மரணத்திற்கு நீதி கேட்டு, தொடர் போராட்டங்களை ஏன் நடத்தவில்லை? திமுக மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும், சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், 41 பேர் இறப்புக்குக் காரணம் இவர்கள் தான் என்று குற்றச்சாட்டு வைத்த விஜய், ஏன், இறப்புச் சம்பவத்தை மட்டும் பேசாமல் பாசாங்கு அரசியல் செய்கிறார்? ஊழல் ஆட்சி திமுக-வை, மக்கள், குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடப் போகிறார்கள் என்று கூறி, வீர, தீர, காமெடி கலந்த மசாலா சினிமா பஞ்ச் வசனங்களைப் பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்களா?
தமிழக வெற்றி கழகத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் வித்தியாசமான வீர வசன காட்சிகளை, பேசிவிட்டு இடைவேளைக்குப் பிறகு கண்ணீர் காட்சிகளையும் மேடையில் அரங்கேற்றி விட்டு, தேர்தல் கிளைமாக்ஸ் புதிய காட்சிகளை திட்டமிட்டு நடிக்கும் ஒரு நடிகரிடம் தமிழக மக்கள் இனி ஏமாறக்கூடாது. தமிழக வெற்றிக் கழகத்தையும் தொண்டர்களையும் அடமானம் வைத்து, 41 பேர்களின் சாவைப் பற்றிக் கவலைப்படாமல், அனைத்துக் கட்சி அரசியல் வியாபாரி ஆதவ் அர்ஜுனா மூலம், பத்துப் படங்களில் நடித்தால் கிடைக்கும் சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு, லாட்டரி மாபியாவின் பின்னணியில், கலெக்ஷன் அரசியல் செய்வது நியாயமா?
சதுரங்க வேட்டை நாயகனாக நடிப்பது நியாயமா?
நீண்ட காலமாக அரசியலில் உன்னிப்பாகக் கவனிக்கிறேன் என்று பேசும் நடிகர் விஜய், பத்தாண்டுகளாக மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வெளிப்படையாக வாக்குக் கேட்டு, ரசிகர்களின் வாக்கையும் மடைமாற்றி, சூழ்ச்சி அரசியல் செய்ததைத் தமிழக மக்கள் மறக்கவில்லை. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படும், வீழ்த்தப்படும் என்றதும், திமுக-வையும், முதல்வர் ஸ்டாலினையும் காப்பாற்றும் நோக்கத்தில் கட்சியை ஆரம்பித்து, திமுக-வின் எதிர்ப்பு வாக்குகள், அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விழுந்துவிடக் கூடாது - தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்று திட்டம் போட்டு, அரசியல் சதுரங்க வேட்டை நாயகனாக நடிப்பது நியாயமா? தமிழக வெற்றிக் கழகத்தை வியாபாரக் கழகமாக மாற்றிய நடிகர் விஜய் அவர்களே, இப்போது தமிழக அரசியல் கள நிலவரம் என்னவென்றால், தீய சக்தி திமுக-வை வெற்றி பெற வைக்கத் துடிக்கும், தமிழினத்தின் துரோக சக்தியான தவெக-வுக்கு, தகுந்த பாடத்தை, தமிழக மக்கள் கற்றுக் கொடுப்பார்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.