தென்கோடியான ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கும், உத்தரப்பிரதேசத்தின் அயோத்திக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புள்ளது
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாட்கள் கடும் விரதம் இருந்து வருகிறார். அத்துடன், நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். குறிப்பாக, ராமருடன் தொடர்புடைய கோயில்களில் பிரதமர் மோடி தரிசனம் செய்து வருகிறார்.
அந்தவகையில், மூன்று நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று தரிசனம் செய்தார். இதையடுத்து, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி, கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பிரதமர் மோடி புனித நீராடினார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று காலை தனுஷ்கோடி சென்ற பிரதமர் மோடி, அரிச்சல் முனை கடற்கரையில் பிராணாயாமம் செய்து பூக்கள் தூவி வழிப்பட்டார். பிறகு, தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயிலிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
தனுஷ்கோடி: அரிச்சல்முனை கடற்கரையில் மலர்களை தூவி வழிபாடு செய்த பிரதமர் மோடி - போட்டோ க்ளிக்ஸ்!!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், தென்கோடியான ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கும், உத்தரப்பிரதேசத்தின் அயோத்திக்கும் உள்ள தொடர்பு பற்றி பலரும் தேடி வருகிறார்கள்.
ராமேஸ்வரத்தில் உள்ள பல புகழ் பெற்ற பல இடங்கள் ராமாயணத்துடன் தொடர்புடையது. தமிழகத்தில் இருக்கும் ஒரே ஒரு ஜோதிர்லிங்கம் ராமேஸ்வரம் ஸ்ரீராமநாத சுவாமி கோயிலே. குறிப்பாக, தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கும் அயோத்திக்கும் வரலாற்று ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் தொடர்புள்ளது.
வங்காள விரிகுடா, மன்னார் விரிகுடா என இருபுறமும் கடல் சூழ இடையே அழகாக தனுஷ்கோடி காட்சி அளிக்கிறது. வில்லைப் போன்று வளைந்த கடற்கரையை கொண்டுள்ளதால் தனுஷ்கோடி என பெயர்பட்டது. ஸ்ரீராமர் வில்லை வைத்த இடம் என்பதாலும் இது தனுஷ்கோடி என்றானது என்கிறார்கள். 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் சிதைந்து போன அடையாளங்களுடன் தனுஷ்கோடி காட்சி அளித்தாலும், அதன் வரலாற்று பெருமைகள் இன்னும் நீங்கவில்லை.
அரிச்சல் முனை கடற்கரையில் பிராணாயாமம் செய்து பூக்கள் தூவி வழிபட்ட பிரதமர் மோடி!
ராவணனை வதம் செய்ய ராமர் உறுதிபூண்டது தனுஷ்கோடியில்தான் என்கிறார்கள். சிவபக்தரான ராவணனை வதம் செய்ததும், தோஷம் வந்து விட கூடாது என்பதால் சிவலிங்கத்தை கடற்கரை மண்ணில் செய்து ராமர் வழிபட்டதாக கூறுகிறார்கள். அயோத்தியின் சிவலிங்கம் ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், ராமேஸ்வரத்தின் புனித தீர்த்தம் அயோத்தி சென்றதும் ராமாயண காலத்திலேயே நடந்துள்ளது
தனுஷ்கோடியின் தென்முனைப் பகுதியான அரிச்சல்முனையில் ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமும் நந்தியும் உள்ள ஒரு சிறிய கோயில் உள்ளது. இங்கு ராமர், சீதையுடன் லட்சுமணரும், அனுமனும் உடன் அருளுகிறார்கள். அரிச்சல்முனைப் பகுதியில் இருந்தே ஸ்ரீராமர் இலங்கையின் மன்னார் பகுதிக்கு சேது பாலம் கட்டத் திட்டமிட்டார் என்றும் கூறப்படுகிறது.
ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு செல்லும் வழியில் இருபுறமும் கடல் நீர் சூழ ஸ்ரீகோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. இங்குதான், ராமருக்கு உதவி செய்வதற்காக விபீஷணன் அவரிடம் அடைக்கலம் பெற்றார் என்பது ஐதீகம். மேலும் விபீஷணனுக்கு இலங்கையின் மன்னராக இங்கு வைத்துத்துதான் பட்டம் சூட்டியதாகவும் கூறப்படுகிறது. இலங்கை மன்னர் ராவணனை போரில் வென்று, அவரது தம்பி விபீஷணருக்கு இலங்கை மன்னராக பட்டாபிஷேகம் செய்த தலமாக இக்கோவில் திகழ்கிறது.
இக்கோயிலில், ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி அருள் பாலிக்கின்றனர். இங்கு ராமருக்கு அருகில் ஆஞ்சநேயர் இல்லாமல், ராமரை வணங்கியபடி, விபீஷணர் காட்சியளிக்கிறார். இந்தக் கோயில் விபீஷணர் கட்டியதாகக் கூறப்படுகிறது. கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீராமர் ஆண்டுதோறும் எழுந்தருளி, விபிஷணருக்குப் பட்டம் சூட்டி வைக்கும் வைபவம் இன்றளவும் நடந்து வருகிறது.