பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நாளை சென்னை வருகிறார். இதனையடுத்து திருச்சி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார். பிரதமர் மோடியின் தமிழகம் பயணத்தை தொடர்ந்து பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தமிழகம் பயணம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில் 3 நாட்கள் பயணமாக நாளை சென்னை வரும் மோடி , திருச்சி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கும் செல்லவுள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. அதன் படி, நாளை மாலை 4 மணி அளவில் பெங்களூரில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி மாலை 4. 55 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைகிறார்.
இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாருக்கு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கிற்கு செல்கிறார். அங்கு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
வரவேற்க தயாராகும் பாஜகவினர்
இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (ஜன.19) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து ராஜ் பவன் செல்லும் பிரதர் மோடி அங்கே இரவு ஓய்வெடுக்கிறார். முன்னதாக பிரதமர் மோடிக்கு விழா அரங்கிற்கு செல்லும் வழி முழுவதும் பாஜகவினர் சார்பாக வரவேற்பு கொடுக்கின்றனர். இந்த நிகழ்வுக்கு பிறகு அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு சென்று செல்கிறார். அங்கிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும் கலந்து கொள்கிறார்.
ராமேஸ்வரத்தில் கோயிலுக்கு செல்லும் மோடி
திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மதியம் 2 மணிக்கு புறப்படும் பிரதமர் மோடி ராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபம் ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொள்ளும் மோடி, இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்கிறார். ராமேஸ்வரத்தில் இரவு தங்கும் மோடி. அடுத்த நாள் அதாவது 21ஆம் தேதி, காலை அக்னீ தீர்த்த கரையில் குளிக்கிறார்.
இதனையடுத்து பிரதமர் மோடி சாலை மறக்குமாக அரிச்சல் முனை சொல்கிறார். தொடர்ந்து கோதண்ட ராமர் கோவில் நடைபெறும் ராமர் பாதை என்ற புத்தகத்தையும் வெளியிடுகிறார்.இதனை தொடர்ந்து மண்டபத்திற்கு சாலை மார்க்கமாக வரும் பிரதமர் மோடி 11.30 மணியளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மதுரைக்கு செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் டெல்லிக்கு மதியம் 12.30 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
பாதுகாப்பு அதிகரிப்பு
பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழகம் வருவதையொட்டி பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், திருச்சி , சென்னை உள்ளிட்ட 3 இடங்களில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழா அரங்குகளை மத்திய பாதுகாப்பு குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து்ள்ளனர்.
இதையும் படியுங்கள்
ஓடாத காளை.. என்னது அண்ணாமலை முதல்வரா? அது நடக்காதா விஷயம்.. பங்கம் செய்யும் ஜெயக்குமார்..!