
திருவள்ளூர்
புதிய ஸ்மார்ட் கார்டு பெற செல்லிடப்பேசிக்கு எட்டு இலக்க எண் குறுந்தகவலாக வரும். இது அழிந்துவிட்டால், “1967 என்ற இலவச இணைப்பு எண்ணை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்” என்று திருவள்ளூர் ஆட்சியர் எ.சுந்தரவல்லி கூறியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “மாவட்டத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேசன் அட்டைகளுக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய மின்னணு அட்டை அச்சிடப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும். குறுந்தகவல் கிடைக்கப் பெற்ற 15 நாள்களுக்குள், சம்பந்தப்பட்டோர் தங்களது ரேசன் கடைகளில் காண்பித்து, பழைய ரேசன் அட்டையை ஒப்படைத்துவிட்டு புது மின்னணு அட்டையைப் பெற்றுக்
கொள்ளலாம்.
மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை போன்ற அனைத்தும் இ-சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
செல்லிடப்பேசி எண்களை இதுவரை குடும்ப அட்டையுடன் இணைக்காதவர்கள் உடனடியாக தங்களது பயன்பாட்டிலுள்ள செல்லிடப்பேசி எண்ணைக் குடும்ப அட்டையுடன் இணைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே, தவறுதலாகவோ அல்லது மூன்றாம் நபரின் செல்லிடப்பேசி எண்ணை பதிந்திருந்தால், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களை அணுகி, சரியான எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.
குடும்ப அட்டைதாரர்கள் எவரேனும் கவனக் குறைவாக செல்லிடப்பேசி எண்ணுக்கு வரப்பெற்ற எட்டு இலக்க எண்ணை அழித்து விட்டாலோ அல்லது தானே அழிந்து விட்டாலோ 1967 என்ற இலவச இணைப்பு எண்ணை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அனைத்து மக்களும் மின்னணு குடும்ப அட்டையைப் பெற்று பயனடைய வேண்டும்” என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.