
தி.மு.க. தலைவர் கருணாநிதியை, லண்டர் டாக்டர் பரிசோதித்து, அவரது உடம்பில் எதனால் கொப்புளம் வந்த்து என பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல்நலக் குறைவால், சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில், கடந்த 45 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். காய்ச்சல், இருமலுக்கு மாத்திரை சாப்பிட்டதால் அலர்ஜி ஏற்பட்டு, உடலில் கட்டிகள் ஏற்பட்டன. அதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பார்வையாளர்கள், வெளியாட்கள் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை.
கருணாநிதியின் குடும்பத்தில் உள்ள அழகிரி, செல்வி, ஸ்டாலின், துணைவி ராஜாத்தி, கனிமொழி, தமிழரசு ஆகியோர் மட்டும் சந்தித்து பேசினர்.
தனியார் மருத்துவமனை டாக்டர்கள், வீட்டுக்கு சென்று, கருணாநிதிக்கு சிகிச்சை அளித்ததால், அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடலில் ஏற்பட்டிருந்த, கொப்பளங்கள் மறைந்தன.
இந்நிலையில், அவருக்கு தோலில் ஏற்பட்டுள்ள அலர்ஜிக்கான காரணம் குறித்து, லண்டனை சேர்ந்த தோல் நோய் நிபுணர், நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தார். அவர், கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை செய்து, தொடர்ந்து மேல் சிகிச்சைக்கான சில ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது. கருணாநிதி பெருமளவு குணமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து, ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, வரும் 24ம் தேதி நடக்க உள்ள மனித சங்கிலி போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ள வேண்டும் என மூத்த தலைவர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்துள்ளது. இதனால், இந்த முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க பத்திரிகையாளர்களை, கருணாநிதி சந்திப்பாரா அல்லது அறிக்கை வெளியிடுவாரா என, கட்சியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.