
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக கூட்டணி தொடர்பாக அமித் ஷாவுடன் நடந்த ஆலோசனையில் பேசப்பட்டது என்ன என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
"2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக நான், எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினோம். ஒற்றுமையாக இருக்குமாறு அமித் ஷா கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதானால் தான் இன்று அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது.
2021 தேர்தலில் அதிமுக தோல்வியை அடைந்ததற்கு முக்கியக் காரணம் அதிமுக பிரிந்து இருந்ததுதான். 2019 நாடாளுமன்ற தேர்தலில் அமமுக தென் மாவட்டங்களில் 14 தொகுதிகளில் ஒன்றரை லட்சம் வாக்குகளுக்கு மேல் வாங்கியது. சட்டப்பேரவை வாரியாகப் பார்த்தால், 14 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள 80 க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தலா 26 ஆயிரம் வாக்குகள் அமமுக வாங்கியது.
இந்த வாக்குகள் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தக்கூடிய வாக்குகளாக இருந்திருக்கும். இதனால் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என நானும் அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியிடம் கூறினோம். இதற்கு விருப்பமில்லை என்றால் பாஜகவுக்கு 20 தொகுதிகள் கூடுதலாகக் கொடுங்கள், அதை பாஜக அமமுகவுக்குக் கொடுக்கும் என்று அமித் ஷா கூறினார். அதற்கும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. தொகுதிகளைக் குறைத்துக் கேட்டபோதும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
2021 தேர்தலில் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளே வெல்லும் என மத்திய அரசின் உளவுத்துறை புள்ளி விவரத்துடன் கூறியிருப்பதை அமித் ஷா எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக்கூறினார். அதையும் ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி அதிமுக 150 தொகுதிகள் வெல்லும் என்று கூறினார்.
இதனால், அமித் ஷா இன்னொரு யோசனையும் சொன்னார். 'நான் சொன்னால் டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்வார். ஆனால், தினகரனின் அமமுகவுக்கு 10 வாரிய தலைவர் பதவிகளை விட்டுக்கொடுக்க வேண்டும்' என்று அமித் ஷா கூறினார். எடப்பாடி பழனிசாமி அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், அமித் ஷா வேகமாக அந்த இடத்தைவிட்டு எழுந்து கிளம்பிவிட்டார். அமித் ஷா சொன்னதைக் கேட்டிருந்தால் அதிமுகதான் இன்று ஆளுங்கட்சியாக இருக்கும்"
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.