வானிலை ஆய்வு மையம் தமிழக மக்களுக்கு குட் நியூஸ் ஒன்றைக் கூறியிருக்கிறது. தமிழகத்தில் இன்னும் ஆறு நாளுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்றும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கோடைவெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் தமிழக மக்களுக்கு குட் நியூஸ் ஒன்றைக் கூறியிருக்கிறது. தமிழகத்தில் இன்னும் ஆறு நாளுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கணித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
"இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும். நாளையும், நாளை மறுதினமும் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 11ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் குறையக்கூடும்.
ஏப்ரல் 11ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 3-5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 104 - 105 டிகிரி பாரான்ஹீட் வெயில் வரை இருக்கும். உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 100-104 டிகிரி பாரான்ஹீட் வரையும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 93-98 டிகிரி பாரான்ஹீட் வரை வெயில் இருக்கக்கூடும். நாளை தொடங்கி ஏப்ரல் 11 வரை அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 40-70 சதவீதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 சதவீதமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் இடங்களில் அசௌகரியமதான சூழல் ஏற்படலாம்"
என்று வானிலை ஆய்வு மையத்தில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.