"18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு சாதகமாக அமைந்தபிறகு ஆட்சியைக் கலைக்க மாட்டோம். புதிய முதலமைச்சரை நியமனம் செய்து ஆட்சியைத் தொடருவோம்" என்று அ.ம.மு.கவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை
"18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு சாதகமாக அமைந்தபிறகு ஆட்சியைக் கலைக்க மாட்டோம். புதிய முதலமைச்சரை நியமனம் செய்து ஆட்சியைத் தொடருவோம்" என்று அ.ம.மு.கவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று அதன் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் புதுக்கோட்டையில் நடைப்பெற உள்ளது. வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைப்பெற உள்ள இந்தக் கூட்டத்திற்கான இடத்தை அ.ம.மு.கவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்செல்வன் நேற்று பார்வையிட்டார்.
அதன்பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், "18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சனம் செய்தது தவறு என்று உணர்ந்தேன். அதனால் மன்னிப்புக் கேட்டேன். தற்போது மூன்றாவது நீதிபதி முன்பு இவ்வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.
வழக்கின் தீர்ப்பு நிச்சயம் எங்களுக்கு சாதகமாக அமையும். எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தபிறகு ஆட்சியைக் கலைக்காமல் புதிய முதலமைச்சர் நியமனம் செய்து ஆட்சியைத் தொடருவோம்.
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்களில் அ.ம.மு.க தனித்துப் போட்டியிடும். அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துப் போட்டியிட்டாலும் அ.ம.மு.க.வுக்கு தான் வெற்றி.
'கருணாநிதியின் உடலை அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய வேண்டும்' என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அ.தி.மு.க. அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? இதில் இருந்தே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துச் செயல்படுகிறது என்பது தெரிகிறது.
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள். ஆனால், சமீபகாலமாக பா.ஜ.க.வோடு தி.மு.க. நெருக்கமாக இருந்து வருகிறது" என்று அவர் கூறினார்.