பட்டப்பகலில் பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒக்கூரை சேர்ந்தவர் ராஜா முகமது. இவரது மனைவி யாசினி . கடந்த 2 மாதத்திற்கு முன்பு வேலைக்காக ராஜா முகமது வெளிநாடு சென்று விட்டார். இதனால் யாசினி ஒக்கூரில் உறவினர்கள் ஆதரவுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில், யாசினிக்கும் அவரது உறவினரான சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்த சிராஜூதீனுக்கும் இடையே முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனையடுத்து, இன்று மதியம் யாசினி வீட்டிற்கு வந்த சிராஜூதீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரத்தில் யாசினியை ரத்தம் சொட்ட சொட்ட கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள், சிராஜூதீனை மடக்கி பிடித்து பலமாக தாக்கினர். இதில் சிராஜூதீன் அவர் மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்தத கரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் யாசினி உடலை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சிராஜூதீனை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரித்ததில், கொடூரமாக கொலை செய்த சிராஜூதீன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சிவகங்கை மாவட்ட துணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யாசினி கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.