
சிவகங்கை
காரைக்குடி நகராட்சியின் சொத்து வரி மற்றும் கடை வாடகை உயர்வை மக்கள் கருத்து கேட்காமல் செயல்படுத்தினால் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடித் தொழில் வணிகக் கழகம் சார்பில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி.திராவிடமணி தலைமை வகித்தார். பொருளாளர் சுப.அழகப்பன், துணைத் தலைவர் ராகவன் செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் ஏஆர். கந்தசாமி வரவேற்றுப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் நா.குணசேகரன் (திமுக), எஸ்.மாங்குடி (காங்கிரஸ்), பிஎல்.ராமச்சந்திரன் (சிபிஐ), ப.சின்னக்கண்ணு (சிபிஎம்), ச.அரங்கசாமி (தி.க), டி.பூமிநாதன் (தேமுதிக), திருஞானம் (ஆம் ஆத்மி), சாகுல் ஹமீது (ம.ம.க), பசீர்முகமது (த.ம.ஜ.க), அ.ராமகிருஷ்ணன் (நடையாளர் கழகம்), சி.மாதவன் (அரசு ஓய்வூதியர் சங்கம்), கரு.ஆறுமுகம் (மக்கள் மன்றம), சையது பாவா (நகராட்சி கடை வணிகர் சங்கம்) மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், வணிகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
“காரைக்குடி நகராட்சியினரால் வீட்டு வரி மறு ஆய்வு என விடுபட்ட சதுர அடிக்கு கூடுதலாக வரி விதிப்பு செய்வதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நகராட்சி கடைகளுக்கு திடீர் வாடகை உயர்வால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே இதை நிறுத்தி வைக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகள் வந்தபின்னர் இதுகுறித்து பரிசீலனை செய்யலாம்.
மக்கள் கருத்தைக் கேட்காமல் வரி விதிப்புகளை செயல்படுத்தினால் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.