
நாகப்பட்டினம்
தமிழகத்தில் தடுப்பணைகள் கட்டுவது குறித்து மே 18-ல் முதல்வரிடம் மீண்டும் முறையிடவுள்ளோம் என்று தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஐயாக்கண்ணு தெரிவித்தார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஐயாக்கண்ணு கலந்து கொண்டார்,
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“சரித்திரம் கண்டிராத வகையில் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு இலாபகரமான விலையை மத்திய அரசு வழங்கவில்லை.
அனைத்து மாநில விவசாயிகளை ஒன்றிணைத்து பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது தொடர்பாக மே 21-ஆம் தேதி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் டெல்லியில் ஒன்றுகூடி முடிவு செய்யவுள்ளோம்.
தமிழகத்தில் உள்ள ஆறுகள், குளங்களை தூர்வார வேண்டும். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், மே 18-ஆம் தேதி தமிழக முதல்வரை மீண்டும் சந்தித்து முறையிடவுள்ளோம். அப்போது நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.
விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.சுவாமிநாதன், காவிரி நீர்ப்பாசன பாதுகாப்புச் சங்கத் தலைவர் காவேரி தனபாலன், காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் ஆறுபாதி கல்யாணம் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.