
திருவள்ளூர்
சாராயக் கடையை மூடியதால் பக்கத்து ஊருக்கு சென்று சாராயம் வாங்குகிறோம். இதனால், கூடுதல் செலவாகிறது. எனவே, மூடிய சாராயக் கடையை திறக்க வேண்டும் என்று திருவள்ளூர் ஆட்சியரிடம் 100-க்கும் மேற்பட்ட குடிகாரர்கள் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ளது தொட்டாரெட்டிகுப்பம் கிராமம். இந்த கிராமத்தின் எல்லையில் புதிதாக சாராயக்கடை திறக்கப்பட்டதற்கு சுற்றியுள்ள 10 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த சாராயக் கடை மூடப்பட்டது.
ஆனால், அந்த சாராயக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தண்டலம், காக்கவாக்கம் பகுதியைச் சேர்ந்த குடிகாரரக்ள் நேற்று முன்தினம் சாராயக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி ஆட்சியரிடம் மனு அளிக்கும்படி அவர்களை காவலாளர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து நேற்று தொட்டாரெட்டிகுப்பம், தண்டலம், காக்கவாக்கம், தும்பாக்கம், வண்ணான்குப்பம், ஆத்துப்பாக்கம், முக்கரம்பாக்கம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடிகாரர்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர், இது தொடர்பான கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் அளித்தனர்.
அதில் அவர்கள், “தொட்டாரெட்டிகுப்பம் கிராம எல்லையில் உள்ள சாராய்க் கடை மூடப்பட்டதால் நாங்கள் சாராயம் வாங்க 7 முதல் 13 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பெரியபாளையம், தேர்வாய், ஊத்துக்கோட்டைக்குச் செல்ல வேண்டியுள்ளது.
பேருந்தில் சென்றால் கூடுதல் செலவு ஆகிறது. வாகனங்களில் சென்றால் காவலாளர்கள் அபராதம் விதிக்கின்றனர். விபத்திலும் சிக்குகிறோம். இதனால் எங்களால் நிம்மதியாக குடிக்க முடியவில்லை.
எனவே, மூடப்பட்ட சாராயக் கடையை மீண்டும் திறக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.