
திருவள்ளூர்
திருவள்ளூரில் டாஸ்மாக் சாராயக் கடையில் ரூ.8.48 லட்சம் கொள்ளைப் போனதாக கூறிய ஊழியர்கள் மேலாளர் வந்ததும் அவரிடம் ரூ.4 லட்சத்தை தந்துள்ளனர். மீதி பணம் எங்கே என்று கேட்டதற்கு மலுப்பலாக பதிலளித்து போலீசையே குழப்பியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் அருகே உள்ளது போரக்ஸ் பகுதி. இங்கு அரசின் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று உள்ளது.
இந்தக் கடையில் மேற்பார்வையாளராக ஆரணி பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (42), விற்பனையாளர்களாக ஆரணியை அடுத்த கொசவன்பேட்டையைச் சேர்ந்த வேலு (36), அம்பத்தூரைச் சேர்ந்த குமார் (33) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு குமார் அம்பத்தூருக்கு புறப்பட்ட நிலையில், ஜெயச்சந்திரனும், வேலுவும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஆரணி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது போரக்ஸ் அடுத்த மேம்பாலத்தில் காரில் வந்த நான்கு பேர், மோட்டார் சைக்கிளை மடக்கி பின்னர், கத்தியை காட்டி மிரட்டி, சாராயக் கடை விற்பனை பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு இருவரும் தங்களிடம் பணம் இல்லை, கடையில் உள்ளது என்று கூறியதால் மர்ம கும்பல் ஜெயச்சந்திரனையும், வேலுவையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு விற்பனை பணம் ரூ.8 லட்சத்து 48 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, மர்ம கும்பல் தப்பிச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து கவரப்பேட்டை காவல் நிலையத்தில் ஜெயச்சந்திரன், வேலு ஆகியோர் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் சாராயக் கடை மேலாளர் ராமசந்திரன் (43) விசாரணை நடத்தினார். அப்போது, டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்கள் கடையில் தாங்கள் மறைத்து வைத்திருந்த ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்து 500-ஐ எடுத்துத் தந்துள்ளனர்.
அப்போது, மேலாளர் ரூ.8 இலட்சத்து 48 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதாக காவலாளர்களிடம் புகார் அளித்துள்ளீர்கள். ஆனால், தற்போது ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்து 500-ஐ திருப்பி தருகிறீர்களே, மீதிப்பணம் ரூ.3 லட்சத்து 83 ஆயிரம் எங்கே? எனக் கேட்டார்.
இதற்கு கடை ஊழியர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அதிருப்தி அடைந்த டாஸ்மாக் சாராயக் கடை மேலாளர் ரவிசந்திரன், கடையில் பணியிலிருந்த மேற்பார்வையாளர், இரு விற்பனையாளர்களும் கையாடல் செய்திருப்பதாக கூறி, கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஒருபுறம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், மறுபுறம் கையாடல் செய்யப்பட்டதாகவும் கவரப்பேட்டை காவலாளர்களுக்கு புகார்கள் வந்துள்ளதால், காவலாளர்கள் குழப்பமடைந்தனர்.
கடந்த 7-ஆம் தேதி அன்று புதுவாயல் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை மேற்பார்வையாளரை மர்ம கும்பல் தாக்கி 12 இலட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றது.
இந்த நிலையில், மீண்டும் டாஸ்மாக் சாராயக் கடையில் ரூ.8 லட்சத்து 48 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறியதால் காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.