
திருப்பூர்
அரசு ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தனியார் பள்ளி, கல்லூரி ஓட்டுநர்களைப் பயன்படுத்தி 100 சதவீதம் அரசு பேருந்துகளை இயக்குவோம் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறுச் சங்கங்களைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக திருப்பூர் மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றிரவு நடைப்பெற்றது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் எஸ்.ஜெயந்தி முன்னிலை வகித்தார்.
அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சில தொழிற்சங்கங்களால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் மற்றும் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பேருந்துகளை சீரான முறையில் இயக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் தங்கு தடையின்றி பேருந்துகளை இயக்க போதுமான அளவு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 62 சதவீதம் பேருந்துகள் இ்யக்கப்பட்டன. நாளை முதல் திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கேயம் மற்றும் உடுமலை ஆகிய அரசு பணிமனைகளில் உள்ள பேருந்துகளுக்கு தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மூலமாக 100 சதவீதம் முழுமையான முறையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பேருந்து நிலையங்கள் மற்றும் போக்குவரத்து பணிமனைகளுக்கு காவலாளர்கள் உரிய பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் எந்தவித சிரமமுமின்றி பேருந்துகளில் பயணம் செய்வதற்கு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா, மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் திஷா மிட்டல், உதவி ஆட்சியர்கள் ஷ்ரவன் குமார் (திருப்பூர்), கிரேஸ் பச்சுவா (தாராபுரம்), உடுமலை ஆர்.டி.ஓ. சாதனைக்குறள், அனைத்து தாசில்தார்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்றனர்.