பெரம்பலூரில் வெளுத்து வாங்கும் மழையால் நீர் நிலைகள் நிரம்பத் தொடங்கின; விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி…

First Published Aug 10, 2017, 7:57 AM IST
Highlights
Water levels started to increased cause of heavy rain in Perambalur


பெரம்பலூரில் இடி, மின்னலுடன் கனத்த மழை வெளுத்து வாங்குவதால் இங்குள்ள நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால், விவசாயிகள் மற்றும்  மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் ஓரளவு மழை பெய்ததால் ஓரளவிற்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைத்தது. ஜூலை மாதத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே மழை பெய்தது.

வரலாறு காணாத வறட்சியைச் சந்தித்த பெரம்பலூர் நகருக்கு தற்போது தெருக் குழாய்களில், தண்ணீர் வினியோகம் செய்வதை நகராட்சி நிர்வாகம் அதிகரித்து வருகிறது. காவிரி குடிநீரும் 5-7 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து 6-ஆம் தேதி சாரல் மழை அடித்தது. நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் சுமார் இரண்டு மணிநேரம் பலத்த மழை பெய்தது.

இதனால் துறைமங்கலம் பெரிய ஏரிக்கு மருதையாற்றில் இருந்து வாய்க்கால் மற்றும் இதர வாய்க்கால் வழியாக நீர்வரத்துத் தொடங்கியது. மேலும், இந்த ஏரியில் சமீபத்தில் தூர்வாரி சீரமைத்துள்ளதால் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது.

பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இப்பகுதி மக்களும், விவசாயிகளும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த மழை இன்னும் சில நாள்களுக்கு நீடித்தால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சித் தெரிவித்தனர்.

click me!