
புதுக்கோட்டை
சிறப்பான கல்வியைப் பெற்று மாணவ, மாணவிகள் நூறு சதவிகிதத் தேர்ச்சியைப் பெற வேண்டும் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை அறிவுரை வழங்கியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடைபெற்ற விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தும், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கனார் மக்களவைத் தலைவர் மு.தம்பிதுரை.
அப்போது அவர் பேசியது:
"எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, பால் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் பால் கூட்டுறவுச் சங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கல்விதான் ஒரு மனிதனின் வாழ்க்கையை முன்னேற்றும். இளம் வயதில் மாணவ, மாணவிகள் சிறப்பாகக் கல்வி கற்க வேண்டும். தமிழக அரசும் மாணவர்கள் சிறப்பான கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான கல்வி உதவிச் சாதனங்களை வழங்கி வருகிறது. சிறப்பான கல்வியைப் பெற்று மாணவ, மாணவிகள் நூறு சதவிகிதத் தேர்ச்சியைப் பெற வேண்டும் என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர்.
கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மோகன், மாவட்டக் கருவூல அலுவலர் மூக்கையா, கோட்டாட்சியர் எஸ்.எச்.சேக் முகைதீன், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவர் ரா.சின்னத்தம்பி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.