
சிவகங்கை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 15, 16 ஆகிய நாள்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ராஜசேகர் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில், "8-வது ஊதியக் குழுவில் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 15,16 ஆகிய இரு நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள அந்தந்த பகுதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும்,
மார்ச் 9-ஆம் தேதி சென்னையில் உள்ள சிஆர்ஏ அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் பெருந்திரள் முறையிட்டு போராடுவது என்றும்,
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 3, 4, 5, 6 ஆகிய நான்கு நாட்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.