
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தீப்பெட்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு வழங்கவில்லை என்றால் தொடர்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இங்கு ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இங்குப் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு கடந்த சில வருடங்களாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் ஊதிய உயர்வு குறித்து அதிகாரிகள் யாரும் இதுபற்றி பேசவோ, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை.
எனவே, "தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தி, அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலையில் போராட்டம் நடைப்பெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலாளர் தமிழரசன் தலைமை வகித்தார். ஐ.என்.டி.யு.சி. தலைவர் ராஜசேகரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் மகேந்திரன், கருப்பசாமி, கற்பகவல்லி உள்பட ஏராளமான தீப்பெட்டி தொழிலாளர்கள் பங்கேற்ற்றனர்.
போராட்டத்திற்குப் பிறகு தீப்பெட்டித் தொழிலாளர்கள், தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்புலட்சுமியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அவர், "இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார். . அதற்கு தொழிலாளர்கள், "இன்னும் பத்து நாள்களில் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.