
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோவை மர்ம நபர்கள் கடத்திச் சென்று தீ வைத்து எரித்துள்ளனர். அதனைப் பார்த்து அதன் உரிமையாளர் கதறி அழுதார்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த செல்லவேல் மகன் பாலமுருகன் (31). சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். கடந்த திங்கள்கிழமை வழக்கம்போல் ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு தூங்கிவிட்டார்.
இந்த நிலையில், செவ்வாய்கிழமை காலையில் எழுந்து ஆட்டோவை எடுக்கச் சென்றபோது ஆட்டோவைக் காணவில்லை. இதனைக் கண்ட பாலமுருகன் அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார்.
அப்போது கடற்கரை அருகே அவரது ஆட்டோ தீயில் எரிந்த நிலையில் நின்றது. அதனைக் கண்டு அதன் உரிமையாளர் கதறி அழுதார். இதை நம்பி தான் தனது பொழப்பு ஓடுகிறது என்று புலம்பினார்.
மர்ம நபர்கள் யாரோ ஆட்டோவை கடத்திச் சென்று தீ வைத்து எரித்துள்ளனர் என்று எண்ணினார். அதன்பின்னர், இதுகுறித்து, கடற்கரை காவல்நிலையத்தில் பாலமுருகன் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குபதிந்த காவல்துறையினர் ஆட்டோவுக்கு தீ வைத்தது யார்? என்றும், முன் விரோதம் ஏதேனும் இருக்கிறதா? என்றும் விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோவுக்கு தீ வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.