
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள பகத்துவான்பட்டி பகுதியைச் சேர்ந்த காமராஜ். இவர் கந்தர்வகோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செங்கிப்பட்டி சாலையில் அரிசிக்கடை மற்றும் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் அவர் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், காமராஜ் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.6000-தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதேபோல அதே பகுதியில் உள்ள உரக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2000, பூச்சி மருந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பணத்தையும், லாரி புக்கிங் ஆபீஸ் அலுவலக பூட்டை உடைத்து உள்ளே இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் மன்னர்மன்னர் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்த புகார்களின்பேரில் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.