
"உன் கணவன், வட்டி பணம் தரும் வரைக்கும், நீ என் வீட்டில் வந்து இரு" என்று கூறி பெண்ணிடம் தகாத முறையில் நடந்த கிருஷ்ணகிரி திமுக மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளராக இருப்பவர் சீனிவாசன். இவர் மீது மிரட்டல் மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவரிடம் ஓசூரைச் சேர்ந்த ரவி என்பவர் தொழில் செய்வதற்காக மீட்டர் வட்டிக்கு ரூ.30 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
அதன்பிறகு, சீனிவாசனின் தொலைபேசி அழைப்பை ரவி தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த சீனிவாசன் வட்டி பணம் ஒரு நாள் லேட் ஆனாலும் நேரடியாக வீட்டுக்கே வந்து வட்டி பணத்தை வசூல் செய்துள்ளார்.
ரவி, வட்டிப்பணம் கொடுக்க முடியாமல் காலதாமதம் ஆன நிலையில், ரவியின் மனைவி ஹரிப்பிரியா நடத்தும் ஜிம்முக்கு சென்றுள்ளார் சீனிவாசன். உன் கணவன் வட்டிக்கு பணத்தை வாங்கிக் கொண்டு வட்டிப் பணம் கொடுக்க கசக்குதா? போன் போட்டால் போனை எடுக்க மாட்டேங்குறான்? என்று ஏக வசனத்தில் பேசியுள்ளார்.
உன் கணவன் வட்டி பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு, என்று வலுக்கட்டாயமாக ஹரிப்பிரியாவிடம் எல்லை மீறி நடந்து கொண்டுள்ளார் சீனிவாசன். இதனால் பதறிப்போன ஹரிப்பிரியா, ஓசூர் டி.எஸ்.பி. மீனாட்சியிடம் கண்ணீர் மல்க கதறியுள்ளார்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜசோமசுந்தரத்தை அழைத்த டி.எஸ்.பி. மீனாட்சி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். ஹரி பிரியா கூறிய புகார் உண்மை என்பதை அறிந்த போலீசார், திமுக மாவட்ட துணை செயலாளர் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.