
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த முதியவர் மீது மணல் கடத்தி சென்ற மினி லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வீரசம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் (60), தொழிலாளியான இவரது மகள் சாந்தி. இவர் தச்சூர் சமத்துவபுரத்தில் வசித்து வருகிறார்.
நடேசனின் மருமகன் சரவணன் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டு அங்கேயே தங்கியிருக்கிறார். இதனால் மகளுக்கு துணையாக நடேசன் தச்சூரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை தச்சூர் சமத்துவபுரத்தில் வீட்டின் முன்பு நடேசன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆரணி தாசில்தார் எஸ்.திருமலை மற்றும் வருவாய்த் துறையினர் கைகாட்டியும் மணல் கடத்தி சென்ற மினி லாரி ஓட்டுநர் அலெக்ஸ் பாண்டியன் நிறுத்தாமல் வேகமாக சென்றார்.
இதனையடுத்து மினி லாரியை அதிகாரிகள் காரில் துரத்தி வந்தனர். அப்போது திடீரென சீனிவாசபுரம் சாலையில் சமத்துவபுரத்திற்குள் மினி லாரி புகுந்தது. அங்கு மின்னல் வேகத்தில் தாறுமாறாக வந்த மினி லாரி வீட்டின் முன்பு படுத்திருந்த நடேசன் மீது ஏறியது.
இதில் அவரது வேட்டி மினிலாரியில் மாட்டிக் கொண்டு சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சாலையோரத்தில் நின்ற லாரியில் இருந்து அதன் ஓட்டுநர் கீழே இறங்கி சக்கரத்தில் சிக்கி இறந்த நடேசன் பிணத்தை தூக்கி வீசிவிட்டு மீண்டும் அங்கிருந்து லாரியை ஓட்டிச் சென்றுவிட்டார்.
இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் லாரியை விரட்டிச் சென்றபோது எதிரே ஆரணி தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினர் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் மினி லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டுநர் அலெக்ஸ்பாண்டியன் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த காவலாளர்கள் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள், "மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்றும் தப்பியோடிய லாரி ஓட்டுநரை கைது செய்ய வேண்டும்" என்றும் உடலை வாங்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், ஆரணி தாலுகா காவல் ஆய்வாளர் சாலமோன்ராஜா மற்றும் காவலாளர்கள் இதுகுறித்து வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநர் அலெக்ஸ்பாண்டியனை கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.
அதன்பின்னரே இறந்த நடேசனின் உடலை வாங்கி கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.