வீட்டுக்கு வரும் திருடனை நம்புங்கள், திமுகவை நம்பாதிங்க, திமுகவும் பாஜகவும் ஒன்னு தான்.. ரெண்டும் பயங்கரமா பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள். ஸ்டாலின் மகன் பற்றி பேசுவார், மோடி மதத்தை பற்றி பேசுவார் என நடிகை விந்தியா தெரிவித்தார்.
கோவையில் மட்டன் பிரியாணி உறுதி
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், சிங்கை ராமசந்திரன் உதயநிதி மாதிரி கிடையாது, அப்பா பின்னாடி ஒழிந்து கொள்பவர் கிடையாது. அண்ணாமலை மாதிரி ரவுடிகளை நம்பாதீர்கள். கணபதி ராஜ்குமார் போன்ற பொய்யை நம்பாதீர்கள். ஆட்சி மாறிவுடன் , கட்சி மாறி போனவர் தான் கணபதி ராஜ்குமார். ஜெயலலிதாவிடம் அரசியல் கற்று கொண்டவர் என தெரிவித்தார்.
நான் தான் தலைவன் என்று ஒரு ஆட்டுக்குட்டி கோவையில் சுத்திகிட்டு இருக்கு. அரசியலுக்காகவும் ,பணத்திற்காகவும் தன்னை மாற்றி கொள்பவர் அண்ணாமலை, மோடியும் ,அண்ணாமலையும் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு இதுதான் கடைசி தேர்தல். தேர்தல் நேரத்தில் ரோடு ஷோ நடத்தி தமிழகத்தில் பாஜக வித்தை காட்டி கொண்டு இருக்கிறது. எனவே திருவிழா முடிந்ததும் ஆட்டை பலிக்கொடுபது உறுதி. தேர்தலுக்கு பின் கோவையில் ஆட்டை மட்டன் பிரியாணி போடுவது உறுதி. பாஜக எவ்வளவு ஆபத்தோ, அதே போல அண்ணாமலையும் ஆபத்து தான் என தெரிவித்தார். குண்டு வெடிப்பு சம்பவத்தில் கீழ்தரமான அரசியலை பாஜக செய்கிறது.
பாஜக உருட்டில் ஸ்பெசலிஸ்ட்
தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக ஒரு நல்ல திட்டத்தை 3 வருடத்தில் செய்து உள்ளார்களா? என கேள்வி எழுப்பியவர், அதிமுக காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நல்ல திட்டங்களை நிறுத்தி விட்டார்கள் என குற்றம்சாட்டினார். திமுக தேர்தலில் ஜெயித்தால் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள். மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வேலை எனவும் விமர்சித்தார்.
தேர்தலுக்கு முன் மக்களும், தேர்தலுக்கு பின் குடும்பம் தான் திமுகவிற்கு முக்கியம். வீட்டுக்கு வரும் திருடனை நம்புங்கள், திமுகவை நம்பாதிங்க. திமுகவும் பாஜகவும் ஒன்னு தான்.. ரெண்டும் பயங்கரமா பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள். ஸ்டாலின் மகன் பற்றி பேசுவார், மோடி மதத்தை பற்றி பேசுவார். திமுக திருட்டு ஸ்பெசலிஸ்ட், பாஜக உருட்டில் ஸ்பெசலிஸ்ட். அதிமுக வெற்றி பெற்றால் நாடு நல்லா இருக்கும்.அதிமுக எம்.பிகள் டெல்லியில் காவல் தெய்வமாக இருப்பார்கள் என விந்தியா தெரிவித்தார்.