
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பட்டப்பகலில் சலூன் கடைக்குள் புகுந்து தலையாரியை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை காவலாளர்கள் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரலை அடுத்த மங்களகுறிச்சியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (55). இவர் அதேப் பகுதியில் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பத்மா என்ற மனைவியும், இலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இலட்சுமிக்கு திருமணமாகி விட்டது.
இசக்கிமுத்து நேற்று மாலையில் முடி வெட்டுவதற்காக, ஏரலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் ஏரல் சினிமா திரையரங்கம் எதிரில் உள்ள சலூன் கடையில் முடி வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென்று சலூன் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் இசக்கிமுத்துவை சரமாரியாக வெட்டினர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஏரல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே காவல் ஆய்வாளர் பட்டாணி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பலத்த காயமடைந்த இசக்கிமுத்துவை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக ஏரல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், ஏரல் காவலாளர்கள் வழக்குப்பதிந்து கிராம நிர்வாக உதவியாளரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.