கேப்டன் துயில் கொள்ளவுள்ள சந்தனப்பேழை தயார்: காவல்துறை கட்டுப்பாட்டில் தேமுதிக அலுவலகம்!

By Manikanda Prabu  |  First Published Dec 29, 2023, 3:28 PM IST

தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது


தேமுதிக நிறுவனர் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக டிசம்பர் 28ஆம் தேதி (நேற்று) காலமானார். அவரது உடல் சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டதை தொடர்ந்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்த குவிந்தனர். இதனால் கோயம்பேடு ஸ்தம்பித்தது.

அதன் தொடர்ச்சியாக, விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் என பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அங்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Latest Videos

முன்னதாக, விஜயகாந்தின் உடல் இன்று மாலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அவரது உடலை தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்னபடி, தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் உறுதி ஊர்வலம் சற்று முன்னர் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர். மக்கள் வெள்ளத்தில் அவரது உடல், ஈ.வெ.ரா சாலை வழியாக கோயம்பேடு அலுவலகம் கொண்டு செல்லப்படுகிறது.

கூட்டநெரிசலை தவிர்க்க விஜயகாந்தின் இறுதி சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட 200 பேருக்கு மட்டுமே நேரில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், கேப்டன் விஜயகாந்தின் இறுதி சடங்கை காண எல்.ஈ.டி. திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு: ராகுல் காந்தி உறுதி!

இந்த நிலையில், தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அதில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தேமுதிக அலுவலகம் அருகே கூடியிருக்கும் பொதுமக்கள் கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தியது. அப்போது லேசான தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து, காவல் துறையின் 3 அடுக்கு பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் தேமுதிக அலுவலகம் கொண்டு வரப்பட்டது.

அதேசமயம், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நல்லடக்கம் செய்ய தேவையான பணிகள் தேமுதிக அலுவலகத்தில் நிறைவடைந்துள்ளன. அவரது உடல் துயில் கொள்ளவுள்ள சந்தனப்பேழை தயார் நிலையில் உள்ளது. அதன் இருப்பக்கமும் கேப்டன் என்று எழுதப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்தின் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார்.

click me!