
தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், “திமுக கவர்ன்மெண்ட் நடத்துறாங்களா ? கண்காட்சி நடத்துறாங்களா ? தவெக ஒரு பொருட்டே இல்லாத போது அதனைப் பார்த்து கதறுவது ஏன் ? மாறுவேசத்தில் மரு வைத்துக் கொண்டு மீடியாவுல உங்கள் ஆட்களை வைத்து பேசுவது மக்களுக்கு தெரியும். திமுகவுக்கு கொள்ளையடித்து வைத்திருக்கும் காசு துணை என்றால் எனக்கு என்மீது எல்லையில்லாத பாசம் வைத்திருக்கும் மக்கள் தான் துணை.
பெரியார் பெயரை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடிப்பவர்கள் தான் நம் அரசியல் எதிரிகள். எதிரிகள் யார் என்பதை சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறோம். அவர்களை மட்டுமே எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாதவர்களையும் எதிர்க்க முடியாது. நான் எத்தனை நிமிடங்கள் பேசினால், எப்படி பேசினால் உங்களுக்கு என்ன ? அதில் இருக்கும் விசயத்தை மட்டும் பாருங்கள் ?
தரக்குறைவாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு நன்றாகவே வரும். வேண்டாம் என விட்டுவைத்துள்ளேன். மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என சொல்கிறீர்கள் ? மக்களுக்கு ஒன்று என்றால் விஜய் வந்து நிற்பான். விஜய் மக்கள் பக்கம், மக்களும் என் பக்கம் தான் நாங்கள் வாயிலேயே வடை சுடுவதற்கு திமுக அல்ல. நாங்க தவெக. அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என ட்ராமா வேற நடத்துகிறார்கள்.
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சமரமே இருக்காது. மக்கள் தைரியமாக இருக்கலாம். எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் சொல்லி திமுகவை காலி செய்ததை போல நானும் சொல்கிறேன் திமுக ஒரு தீய சக்தி தவெக ஒரு தூய சக்தி என்று பேசினார்.
இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சினைகளாகக் கருதப்படும் திருப்பரங்குன்றம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாயப்பு திட்டம் தொடர்பாக விஜய் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டும் திமுக, திருப்பரங்குன்றம், கரூர், பாஜக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமர் மோடி, ஒன்றிய அரசு, அதிமுக குறித்து விஜய் வாய் திறக்கவில்லை. இது தொடர்பாக பேசினால் சிபிஐ, அமலாக்கத்துறை ரைடு வந்துவிடும் என்ற பயமா என கேள்வி எழுப்பி உள்ளனர்.