
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பேருந்தில் சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி வீட்டில் இருந்து பள்ளிக்கு அரசு பேருந்தில் செல்வது வழக்கம். அதன்படி நேற்றும் பள்ளி பேருந்தில் பள்ளி மாணவி சென்றுள்ளார். அப்போது மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியை சேர்ந்த கொத்தனாராக வேலை செய்து வரும் ஸ்ரீதர் (44 ) என்பவரும் பயணம் செய்துள்ளார்.
அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருக்கையில் அமர்ந்து இருந்த ஸ்ரீதரிடம் தனது புத்தகப் பையையை அந்த மாணவியிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்த மாணவியிடம் ஸ்ரீதர் கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவி இதுகுறித்து அருகில் இருந்த பயணிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பேருந்தில் பயணித்த பயணிகள் ஸ்ரீதரை தர்ம அடி கொடுத்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் கொத்தனார் ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அதேபோல் தர்மபுரி மாவட்டம் நல்லம் பள்ளி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அதே பள்ளியில் பணியாற்றி வந்த சமூக அறிவியல் ஆசிரியர் மணிவண்ணன்(55) பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்காமல் இருக்க 10 லட்சம் ரூபாய் தருவதாக உள்ளூர் பிரமுகர்கள் மூலம் ஆசிரியர் பேரம் பேசியதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து அவர் இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.