
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் நேற்று மாலை பயங்கர சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ததில், உலகப் புகழ் பெற்ற உத்திர ரங்கநாதர் கோயில் கொடிமரம் திடீரென சாய்ந்து விழுந்தது. அபசகுனமான இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் தமிழகத்தின் ஸ்ரீரங்கம் போல, வடதமிழகத்தின் புகழ்மிக்க ஆலயமாக திகழ்வது, பாலாற்றின் கரை ஓரம் உள்ள உத்திர ரங்கநாதர் கோவில். பிரம்மனின் யாகத்தைக் காத்தருளியவர் இந்தப் பெருமாள் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள இந்த ஆலயம், இந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கியதலம், ஆண்டாளை மணம் முடித்தது போல், பள்ளிகொண்டாவில் செண்பகவல்லியை மணம் புரிந்த தலம் என பல்வேறு பெருமைகளைக் கொண்டதாக திகழ்கிறது.
தெற்கே ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள எம்பெருமான் ஸ்ரீரங்கநாதர் என்பதுபோல, வடக்கே பள்ளிகொண்டுள்ள இத்தல பெருமாள், உத்திர அதாவது வடக்கு ரங்கநாதர் என அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கர சூறாவளிக் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதியில் ஏராளமான மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
இந்த பயங்கர சூறைக்காற்றில் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில் கொடி மரம் திடீரென சாய்ந்து விழுந்தது. நல்லவேளையாக அப்போது யாரும் அருகில் இல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.
ஆனாலும் கோயில் கொடி மரம் சாய்ந்து விழுந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.