
திருச்சி
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இரண்டாம் கட்டமாக நடந்த விமானப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாமில் நான்காயிரம் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில், இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கு ஆள் சேர்க்கும் முகாம் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
முதல் நாள் நடந்த முகாமில் திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம், நெல்லை, சேலம், நாகை, புதுகை, கடலூர், திருவாரூர், கரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.
இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் அளத்தல், எழுத்துத்தேர்வு போன்றவை நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று முன்தினம் ஓட்டப்பந்தயம், தண்டால் எடுத்தல் போன்ற தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில் 182 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரண்டாவது கட்டமாக நடந்த முகாமில் வேலூர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், பெரம்பலூர், தர்மபுரி, கோவை, காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நான்காயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் அளத்தல், எழுத்துத்தேர்வு நடைப்பெற்றது. இதில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தகுதி தேர்வு இன்று நடக்க இருக்கிறது.