
வெள்ளியங்கிரி மலை தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலிருந்து மேற்கே 40 கி.மீ. தொலைவில் சிறுவாணி மலையை ஒட்டி கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். இம்மலைக்கு கிழக்கே தொடர்ச்சியாக மருதமலை அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும் (தென்கயிலை), சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில், பக்தர்கள் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதபடும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல தமிழக அரசு ரூ.5,099 கட்டணம் விதித்துள்ளது என்றும் தகவல் பரவியது. இதற்கு தமிழக பாஜகவின் தொழிற்பிரிவு துணைத்தலைவர் செல்வக்குமார், பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழக பாஜகவின் தொழிற்பிரிவு துணைத்தலைவர் செல்வக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: வெள்ளியங்கிரி மலை ஏற அரசு ரூ.5353.95 கட்டணம் விதித்துள்ளது. தெற்கில் உதித்த கைலாயமாக, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வெள்ளியங்கிரி மலை, ஆண்டுதோறும் விரதமிருந்து பல லட்சம் மக்கள் பக்தி சிரத்தையுடன் மத யாத்திரையாக எந்த கட்டணமும் இல்லாமல் செல்வது வழக்கம். கடும் மழை, யானை நடமாட்டம் காரணமாக தை மாதம் முதல் வைகாசி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி. ஆபத்தான மலை பாதையை மேம்படுத்த இதுவரை எந்த ஒரு முயற்சியும் எடுக்காத அரசு, கட்டணம் விதித்து வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதுவரை இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கபட்டு வந்தனர், சபரிமலையை போலவே இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை, அப்படிபட்ட பாதையை விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது தமிழக அரசு என கடுமையான விமர்சித்திருந்தார். இந்நிலையில், இந்த பதிவை தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவானது, இது பொய்யான தகவல் என்றும் விளக்கமும் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு சார்பில்: தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் மலையேற்றம் செய்ய வனத்துறை சார்பில் டிரெக் தமிழ்நாடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய ரூ.5,099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் காப்பீட்டு வழிகாட்டி வசதி இருவேளை உணவு, இருவேளை ஸ்னாக்ஸ், 13 கிலோமீட்டர் வாகனப் பயண த், துணி பேக், தொப்பி, பேனா, பறவைகள் பேம்பிளட் போன்றவை அடங்கும்.
இது முழுக்க முழுக்க டிரெக்கிங் சேவை மட்டும் ஆன்மீகப் பயணம் இல்லை. கோயிலுக்கு முன்பே இந்த பயணம் முடிந்துவிடும். பக்தர்கள் மலையேற்றம் செல்லும் மாதங்களில் இந்த டிரெக்கிங் சேவை வழங்கப்படாது. மலையேற்றம் செய்யும் பக்தர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.