
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவர் சின்னதுரையும், அவரது தங்கையும் வேறு சமூகத்தை சேர்ந்த சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர் சின்னத்துரை அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் அவரை சாதி ரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
நாங்குநேரி சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவினர் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம்? மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்கும் கே.எஸ்.அழகிரி!
இந்த நிலையில், நாங்குநேரி விவகாரம் தொடர்பாக விசாரிக்கும் ஒரு நபர் ஆணையம் அனைத்து கல்வி நிலையங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். “நாங்குநேரி விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இவ்விவகாரத்தை மட்டும் விசாரணை செய்யாமல், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் இதுபோன்று ஏற்பட்டுள்ள வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.” என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாதி, மத அமைப்புகள் அதற்குரிய அடையாளத்துடன் செயல்படாமல் பொது அமைப்பு போல் காட்டி கொண்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபடுகின்றனர் என குற்றம் சாட்டியுள்ள திருமாவளவன், எங்கள் கோரிக்கை தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை தண்டிக்க வேண்டும் என்பதல்ல, மாறாக இதை மாணவர்களிடம் பரப்பிய நபர்கள் யார் அதன் பின்னணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவருக்கும், அவரது தங்கைக்கும் விசிக தலைவர் திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.