வர்தா புயல் சேதம் - காஞ்சியில் மத்திய குழு மதிப்பீடு படங்கள்

First Published Dec 29, 2016, 2:35 PM IST
Highlights


வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர், 2-வது நாளாக இன்றும் பல்வேறு இடங்களை பார்வையிட்டு புயல் சேதங்களை மதிப்பீடு செய்யவுள்ளனர். 

கடந்த 12-ம் தேதி வர்தா புயல் தாக்கியதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இதனை மதிப்பீடு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் திரு. Praveen Vashista தலைமையில், மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையைச் சேர்ந்த இயக்குநர் திரு. K.Manocharan, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை உதவி இயக்குநர் திரு. R.B.Kaul உட்பட, 9 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று சென்னை வந்தனர். தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து, ஆலோசனை நடத்திய மத்திய குழுவினர், பின்னர், சென்னையிலுள்ள பனகல் பூங்கா பகுதியிலும், திருமங்கலத்திலும் புயல் சேதங்களை ஆய்வு செய்தனர். 

வர்தா புயலால் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டு, சேகரித்து வைக்கப்பட்டுள்ள கிடங்கிற்கு மத்திய குழுவினர் சென்று பார்த்தனர். பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற மத்தியக்குழுவினர், புயல் பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்டு சேதங்களை மதிப்பீடு செய்தனர். 

இதனைத் தொடர்ந்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வர்தா புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதம் குறித்து மத்தியக்குழுவினர் ஆய்வு நடத்தினர். மேலும், பல்லாவரம் நகராட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்ட குழுவினர் சேதம் குறித்து தெரிந்துகொண்டனர். 

பின்னர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு, பசியாவரம், ஆலாடு உள்ளிட்ட பகுதிகளில், ஏற்பட்ட சேதங்கள் குறித்த புகைப்பட தொகுப்புகளையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர். புயல் சேதப் பகுதிகளில் தமிழக அரசு, முழுவீச்சில், முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதாக மத்திய குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். 

இதனைத்தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று, சென்னையில் ராயபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லுக்கடை மேடு, வெள்ளோடை, சின்னம்பேடு, சோழவரம், ஓரக்காடு, அருமந்தை, சீமாவரம் பகுதிகளில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

click me!