
நடிகை வரலட்சுமி, பெண்கள் சம்பந்தமான பாதுகாப்பு அமைப்பை தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, சந்தித்து பேசினார்.
நடிகை வரலட்சுமி, இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு சென்றார்.
அப்போது, பெண்களுக்கான பாதுகாப்பு அமைப்பை அவர் தொடங்கியுள்ளதாகவும், இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் செயல்படும். இந்த அமைப்பு குறித்த புகார்களை சட்ட ரீதியாக விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
பின்னர் வெளியே வந்த வரலட்சுமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தற்போது பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டில் உள்ள பெண்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அதை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.
இதனால், பெண்களுக்கான பாதுகாப்பு அமைப்பை தொடங்கியுள்ளோம். இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் செயல்படும். இதில், அனைத்து வித புகார்களுக்கும், உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபற்றி முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் மகிளா நீதிமன்றம் அமைக்க வேண்டும் என கேட்டுள்ளோம். அதற்கு பரிசீலனை செய்வதாக முதல்வர் கூறினார்.
மகிளா நீதிமன்றம் என்பது பெண்களுக்கானது. அவர்களுக்கு தேவையான அனைத்து புகார்களும் விசாரித்து உரிய தீர்ப்பு இங்கு மட்டுமே கிடைக்கும். மகிளா நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகளுக்கு 6 மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும். அப்போதுதான், பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைத்துள்ளது என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.