
அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர், பெண்ணிடம் ஆபாசமாக பேசியதை அடுத்து வருவாய் கோட்டாட்சியரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகராக திருஞானம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் சிறுகடம்பூரைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர் அரசாங்கம் வழங்கும் உதவி தொகை பெறுவது தொடர்பாக மனு ஒன்றை அளித்துள்ளார்.
கணவரால் கைவிடப்பட்ட நிலையில் அந்த பெண், அரசு உதவித் தொகை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 15 மாதங்களாக உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது குறித்து மனுவில் கூறியிருந்தார்.
ஆனால், அந்த பெண்ணின் மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தன் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அலுவலர் திருஞானத்திடம் அந்த பெண் கேட்டுள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்காமல் திருஞானம் இழுத்தடித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் திருஞானத்துடன் அந்த பெண் போனில் பேசியுள்ளார். தனக்கு வழங்கப்பட்டு வந்த அரசாங்க உதவித் தொகை வழங்கப்படாதது குறித்தும், தன் மனு மீது நடவடிக்கை எடுக்காதது குறித்தும் அப்போது கேட்டுள்ளார்.
இதற்கு திருஞானம், அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளார். திருஞானத்தின் ஆபாச பேச்சால் வெறுப்படைந்த அந்த பெண், அதனை ரெக்கார்டு செய்து வருவாய்த்துறைக்கு அனுப்பினார்.
வி.ஏ.ஓ. அலுவலரின் ஆபாச பேச்சை அடுத்து, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் டீனா குமாரி, கிராம நிர்வாக திருஞானத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.