
வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதை ஜூலை 11 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது.
இதில் முதல் தாளை 2.41 லட்சம் பேரும் இரண்டாம் தாளை 5.12 லட்சம் பேரும் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 1 ஆம் தேதி வெளியானது.
இதில் 95 % பேர் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல்களே வெளியானது.
இந்நிலையில், இந்த ஆசிரியர் தேர்வில் வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது. அதற்கு சமஸ்கிருதம் மற்றும் வங்க மொழி இரண்டிலும் குழப்பம் இருந்ததால் தேர்வு எழுதிய ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வந்தே மாதரம்" பாடல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதா அல்லது வங்க மொழியில் எழுதப்பட்டதா ? என கேள்வி எழுப்பியது.
அதற்கு இரண்டு மொழியிலும் எழுதப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெர்விக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பு முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு பின்னர், வங்க மொழியில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வந்தேமாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என ஜூலை 11 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இந்த பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.